உள்ளடக்கத்துக்குச் செல்

131 பேருடன் சென்ற கொலம்பிய விமானம் விபத்துக்குள்ளாகி நொறுங்கியது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஆகத்து 17, 2010

கொலம்பிய பயணிகள் விமானம் ஒன்று கரிபியன் தீவொன்றில் தரையிறங்குகையில் பல துண்டுகளாகப் பிரிந்து சிதறியதில் குறைந்தது 129 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


சான் அண்ட்ரெசு தீவு

இவ்விபத்தில் ஒருவர் மட்டுமே கொல்லப்பட்டார். இவரும் மாரடைப்பினாலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏனையோர்கள் ஓடுபாதையில் வீசி எறியப்பட்டார்கள்.


பயணிகள், மற்றும் சிப்பந்திகள் என மொத்தம் 131 பேருடன் கொலம்பியத் தலைநகர் பொகோட்டாவில் இருந்து சென்ற போயிங் 737 விமானம் சான் அண்ட்ரெசு என்ற தீவில் நேற்று திங்கட்கிழமை காலை 0149 மணிக்கு (0649 GMT) தரையிறங்க முற்பட்ட போதே இவ்விபத்து நேர்ந்துள்ளது. அயரெசு என்ற உள்ளூர் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான இவ்விமானம் மின்னல் தாக்கியதாலேயே விபத்துக்குள்ளாகியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


"விமானியின் சாதுரியத்தால் விமானம் விமான நிலையத்துடன் மோதாமல் தவிர்க்கப்பட்டது,” என கொலம்பிய வான்படையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


99 பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் 4 பேரே கடுமையான காயத்துக்குள்ளாகியுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.


இவ்வளவு பயணிகள் உயிர் தப்பியது ஓர் அதிசயம் என சான் ஆண்டிரெசு ஆளுநர் பெத்ரோ கலார்டோ தெரிவித்தார்.


சான் ஆண்டிரெசு தீவு நிக்கராகுவாக் கரையோரத்தின் கிழக்கே 190 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இது ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும்.

மூலம்

[தொகு]