உள்ளடக்கத்துக்குச் செல்

மகேல ஜயவர்தன தேர்வுப் போட்டிகளில் 10 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த முதல் இலங்கை வீரானார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், திசம்பர் 27, 2011

தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 10 ஆயிரம் ஓட்டங்களைப் பெற்ற முதல் இலங்கை வீரர் என்ற பெருமையை மகேல ஜயவர்த்தன அடைந்துள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி வரலாற்றில் பத்தாயிரம் ஓட்டங்களைக் கடந்துள்ள ஒன்பதாவது வீரர் இவர் ஆவார்.


மகேல ஜயவர்தன

ஏற்கெனவே 9999 ஓட்டங்களைப் பெற்றிருந்த மகேல தென்னாப்பிரிக்கா- இலங்கை அணிகளுக்கு இடையில் டர்பனில் நடந்துவரும் இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் முதல் நாளான நேற்று ஒரு ஓட்டத்தைப் பெற்றபோதே தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 10,000 ஓட்டங்கள் எனும் மைல்கல்லைத் தொட்டார். இலங்கையின் முன்னாள் அணித்தலைவரான 34 வயதுடைய ஜயவர்த்தன, 127 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 29 சதங்களையும், 40 அரைசதங்களையும் அடித்துள்ளார்.


ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் மஹேல ஜயவர்த்தன அண்மையில்தான் பத்தாயிரம் ஓட்டங்களைக் கடந்திருந்தார். சனத் ஜயசூரியவுக்கு அடுத்தபடியாக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்களைப் பெற்ற இலங்கை வீரர் மகேல ஜயவர்த்தன ஆவார். 356 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களை விளையாடி 15 சதங்களுடன் 10ஆயிரத்து 59 ஓட்டங்களை அவர் குவித்துள்ளார்.


தேர்வுத் துடுப்பாட்டங்களில் அதிக ஓட்டங்களைப் பெற்ற இலங்கைக் கிரிக்கெட் வீரர்களில் வரிசையில் இரண்டாவதாக குமார் சங்கக்கார உள்ளார். 9170 ஓட்டங்களைப் பெற்ற அவர் நேற்று ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார்.


தேர்வுத் துடுப்பாட்டங்களில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் இந்திய அணி வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.


மூலம்

[தொகு]