உள்ளடக்கத்துக்குச் செல்

லிபியாவில் சட்டம் ஒழுங்கு பேணப்படும் என இடைக்கால அரசுத் தலைவர்கள் உறுதியளிப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, செப்டெம்பர் 2, 2011

லிபியாவின் புதிய இடைக்கால அரசின் தலைவர்கள் நாட்டில் சட்டம் ஒழுங்கு பேணப்படும் என்றும், சகிப்புத்தன்மை கொண்ட சமுதாயம் ஒன்றை உருவாக்குவோம் எனவும் கூறியுள்ளனர்.


முஅம்மர் கடாபிக்குப் பின்னரான லிபியாவின் எதிர்காலம் குறித்து ஆராய்வதற்காக 60 நாடுகளின் பிரதிநிதிகள் பிரான்சின் தலைநகர் பாரிசில் கூடியுள்ளனர். இக்கூட்டத்தில் உரையாற்றிய தேசிய இடைக்காலப் பேரவையின் (NTC) தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீல் அடுத்த 18 மாதத்துக்குள் புதிய அரசியலமைப்புடன் கூடிய தேர்தல்கள் நடத்தப்படும் என உறுதியளித்தார்.


மாநாட்டுக்குத் தலைமை வகித்த பிரெஞ்சு அரசுத்தலைவர் நிக்கொலா சர்க்கோசி தலைவர்களிடையே "மன்னிக்கும் மனப்பாங்கு மற்றும் இணக்கப்பாடு" கட்டியெழுப்பப்பட வேண்டும் எனக் கூறினார். கடாபியினால் அச்சுறுத்தல் உள்ள வரையில் அங்கு வான் தாக்குதல்கள் நிறுத்தப்படாது எனவும் அவர் கூறினார். வெளிநாட்டில் முடக்கிவைக்கப்பட்டுள்ள லிபிய நிதிகளை மீள வழங்குவதில் நாம் உறுதியாக உள்ளோம். 15 பில்லியன் டாலர்கள் லிபிய நிதி வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை எவ்வாறு செலவிடுவது என்பது குறித்தும் மாநாட்டில் ஆராயப்படுகிறது.


கேர்ணல் கடாபி இதுவரையில் தலைமறைவாகவே உள்ளார். நேற்று வியாழக்கிழமை அவர் வானொலி ஒன்றுக்கு வழங்கிய உரையில், தாம் ஒரு போதும் சரணடையப் போவதில்லை எனத் தெரிவித்தார். கடாபி ஆட்சியைக் கைப்பற்றிய 42வது ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு அவர் நேற்று இவ்வுரையை நிகழ்த்தியிருந்தார். கடாபியின் சொந்த இடமான சேர்த்தில் அவரது ஆதரவுப் படைகள் இன்னமும் மிகுந்த வலிமையுடன் இருக்கிறார்கள்.


இதற்கிடையில், லிபியாவின் தேசிய இடைக்காலப் பேரவையை உருசியா அங்கீகரித்துள்ளதாக நேற்று அறிவித்தது.


மூலம்

[தொகு]