உள்ளடக்கத்துக்குச் செல்

இரு கொரியாக்களும் தமது எல்லைகளில் எறிகணை வீச்சுத் தாக்குதல்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், நவம்பர் 23, 2010

எல்லைப் பகுதித் தீவு ஒன்றை நோக்கி வட கொரியா எறிகணை வீச்சுத் தாக்குதல்களை மேற்கொண்டதை அடுத்து பதிலடியாக தென் கொரியா வட கொரிய எல்லைப் பகுதியை நோக்கி எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இரண்டு கடற்படையினர் கொல்லப்பட்டனர்.


கொரிய எல்லையில் உள்ள தீவுகள்

யோன்பியோங் தீவை நோக்கி இன்று பிற்பகல் உள்ளூர் நேரப்படி 1434 மணிக்கு எறிகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து தென் கொரியப் படையினர் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். குறைந்தது 50 எறிகணைகள் தென் கொரியப் பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளன. அத்தீவில் உள்ள தென் கொரிய இராணுவத்தளத்தை நோக்கியே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு தென் கொரிய கடற்படையினரும் மூன்று பொது மக்களும் இத்தாக்குதலின் போது காயமடைந்தனர்.


யோன்பியோங் தீவு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டது. அங்கு வாழும் 1,600 பொது மக்களும் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். பதிலுக்கு தென் கொரியப் படையினர் 80 எறிகணைகளை வட கொரியா நோக்கிச் செலுத்தியது.


"தென் கொரிய எதிரிகளே முதலில் எமது பகுதியை நோக்கி 1300 மனியளவில் எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டனர்,” என வட கொரிய அரசு செய்தி நிறுவனம் அறிவித்தது. எமது பகுதியை நோக்கி 0.001மிமீ தூரம் நகர்ந்தாலும் நாம் மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்துவோம் என அது மேலும் கூறியது.


ஐக்கிய அமெரிக்கா, இரசியா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய இராச்சியம் ஆகியன வட கொரியாவின் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளன.


1953 ஆம் ஆண்டில் அமைதி உடன்பாடு காணப்படாமல் முடிவடைந்த கொரியப் போரின் பின்னர் இடம்பெற்ற மிகவும் பாரதூரமான சம்பவம் இதுவென அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


கடந்த சனிக்கிழமை அன்று வட கொரியா தனது புதிதாத அமைக்கப்பட்ட யுரேனியம் செறிவாக்கல் அணுப்பகுதி ஒன்றை அமெரிக்க அறிவியலாளர் ஒருவருக்குக் காட்டியிருந்தது.


மூலம்

[தொகு]