உள்ளடக்கத்துக்குச் செல்

வட கொரியாவுக்கு நீந்திச் செல்ல முயன்ற நபர் தென் கொரியாவினால் சுட்டுக் கொல்லப்பட்டார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், செப்டெம்பர் 16, 2013

தென் கொரிய எல்லையில் ஆற்றொன்றைக் கடந்து வடக்கே செல்ல முயன்ற நபர் ஒருவரை அந்நாட்டுப் படையினர் சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


வட, தென் கொரிய எல்லையில் இம்ச்சின் ஆறு

இம்ச்சின் ஆற்றில் குதித்த இந்த நபர் எச்சரிக்கைகளையும் பொருட்படுத்தாது தொடர்ந்து நீந்திச் செல்ல முயன்றதை அடுத்தே எல்லைக் காவல் படையினர் அவரை நோக்கிச் சுட்டனர்.


1950-53 காலப் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரை அடுத்து போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது, ஆனாலும் அமைது உடன்பாடு இன்று வரையில் எட்டப்படவில்லை. வட கொரியாவில் இருந்து தப்பி வந்தவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் தென் கொரியாவில் வாழ்கின்றனர். ஆனால் வெகு சிலரே வட கொரியாவுக்குச் தப்பிச் செல்கின்றனர்.


ஆனாலும் பட்டப்பகலில் பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே இவ்வாறு தப்பிச் செல்வது மிக மிக அபூர்வம் என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இதற்கிடையில், 41 ஆண்டுகளுக்கு முன்னர் வட கொரியாவினால் கடத்திச் செல்லப்பட்ட தென் கொரிய நபர் ஒருவர் கடந்த வெள்ளியன்று அங்கிருந்து தப்பி வீடு வந்து சேர்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 68 வயதான ஜோன் வூக்-பியோ என்பவர் 1972 ஆம் ஆண்டில் மஞ்சள் கடலில் மீன் பிடிப் படகு ஒன்றில் வேறு 25 பேருடன் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார். இவர் தற்போது மூன்றாவது நாடு ஒன்றினூடாக தெற்கு வந்து சேர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.


பெரும்பாலும் மீனவர்களைக் கொண்ட சுமார் 500 தென் கொரியர்கள் வட கொரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என தென் கொரியா கூறி வருகிறது.


வட கொரியாவில் இருந்து தப்ப முயல்பவர்கள் வழக்கமாக எல்லையூடாக சீனாவை அடைந்து பின்னர் மூன்றாவது நாடொன்றுக்குச் செல்வார்கள். சீனா இவர்களைக் கைப்பற்றினால், உடனடியாக இவர்கள் வட கொரியாவுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இவ்வாறு அனுப்பப்படுபவர்கள் வட கொரியாவில் கட்டாய தொழில் முகாம்களில் பல ஆண்டுகள் கழிக்க வேண்டியிருக்கும்.


ஆனாலும், 24,000 இற்கும் அதிகமான வட கொரியர் தெற்கிலும், யப்பானிலும் வாழ்கின்றனர்.


மூலம்

[தொகு]