உள்ளடக்கத்துக்குச் செல்

அமெரிக்கப் பேராசிரியர்கள் இருவருக்கு பொருளியலுக்கான நோபல் பரிசு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், அக்டோபர் 11, 2011

அமெரிக்கப் பேராசிரியர்களான தாமஸ் சார்ஜென்ட், கிறிஸ்டோபர் சிம்ஸ் ஆகியோருக்கு 2011 ஆம் ஆண்டுக்கான பொருளியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


நோபல் பரிசை வென்றெடுத்துள்ள இருவரும் பேரினப் பொருளாதாரம் (macro economics) தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். வட்டியை அதிகரித்தல், வரியில் மாற்றங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பொருளாதாரக் கொள்கைககள் எவ்வாறு பணவீக்கம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி போன்றவற்றில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பது தொடர்பில் அவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.


தொமசு சார்ஜென்ட், 68, நியூயோர்க் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான காலப்பகுதியை இவர் ஆராய்ந்தவர். இக்காலத்திலேயே பெரும்பாலான நாடுகள் ஆரம்பத்தில் பணவீக்கத்தை அதிகரிக்கும் நோக்கோடு செயல்பட்டு, பின்னர் தமது பொருளாதாரக் கொள்கையில் திட்டமிட்ட மாற்றங்களை அறிமுகப்படுத்தி பணவீக்கத்தைக் குறைத்தன.


கிறிஸ்டோபர் சிம்ஸ், 68, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொருளியல், மற்றும் வங்கியியலில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். பொருளாதாரக் கொள்கைகளில் ஏற்படுத்தப்படும் தற்காலிக சிறிய மாற்றங்கள் நாட்டின் பொருளாதாரத்தில் எவ்வகையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதைக் கண்டுபிடிப்பதற்கு இவர் ஒரு வழிமுறையை அறிமுகப்படுத்தினார்.


1895 ஆம் ஆண்டு அறிமுகமான நோபல் பரிசில், பொருளியலுக்கான நோபல் பரிசு 1969 ஆண்டு தொடக்கமே வழங்கப்பட்டு வருகின்றன. நோபல் பரிசு வழங்கும் வைபவம் ஸ்டொக்ஹோமில் வரும் டிசம்பர் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மூலம்

[தொகு]