ஆஸ்திரேலிய-மலேசிய அகதிகள் உடன்பாடு சட்டவிரோதமானதென உச்சநீதிமன்றம் தீர்ப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஆகத்து 31, 2011

ஆஸ்திரேலியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையில் அண்மையில் எட்டப்பட்ட அகதிகளைப் பரிமாறும் உடன்பாடு "சட்டவிரோதமானது" என ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பு ஆஸ்திரேலிய அரசுக்கு ஒரு பெரும் பின்னடைவு எனக் கூறப்படுகிறது.


ஜூலியா கிலார்டின் அரசு மலேசிய அரசுடன் கடந்த மே மாதத்தில் செய்து கொண்ட உடன்பாட்டின் படி, மலேசியாவில் அகதிகள் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட 4,000 பேரை ஆத்திரேலியாவுக்குள் வருவதற்கு அனுமதி அளிக்கப்படும். பதிலாக ஆஸ்திரேலியாவில் இருந்து அகதிகள் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாத 800 பேர் மலேசியாவுக்கு அனுப்பப்படுவர்.


ஆனாலும், மலேசியாவில் அகதிகளுக்கு சட்டரீதியாக பாதுகாப்பு இல்லை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. முன்னதாக இம்மாத ஆரம்பத்தில் மெல்பேர்ண் உயர் நீதிமன்றம் ஒன்று அகதிகளை மலேசியாவுக்கு அனுப்புவதற்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது. இன்றைய எமக்கு பெரிதும் ஏமாற்றத்தை அளிக்கிறது என ஆஸ்திரேலியாவின் குடிவரவு குடியகல்வுத் துறை அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார்.


ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான சாசனத்தில் மலேசியா இதுவரையில் கையெழுத்திடாத படியால், அகதிகளுக்கான பாதுகாப்பு அங்கு இல்லை என அகதிகளுக்காக வாதாடிய வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். ஆஸ்திரேலியாவில் இருந்து அகதிகளை வெளியேற்றுவதற்க்கு கிறிஸ் போவனுக்கு அதிகாரம் இல்லை என நீதிமன்றம் கூறியுள்ளது.


மலேசியா ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அகதிகளை ஆஸ்திரேலியாவுக்கூல் அனுப்பத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தீர்ப்பினால் இவர்களின் வருகையில் பெரிதும் குழப்ப நிலை ஏற்படும் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]