தானாகவே இதயத்தைக் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
- 4 பெப்பிரவரி 2016: சிகா தீநுண்மம் காய்ச்சல் உடலுறவு மூலமும் பரவுகிறது
- 12 செப்டெம்பர் 2014: எபோலா காய்ச்சலின் வளர்ச்சி கட்டுக்குள் இல்லை என உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு
- 14 சனவரி 2014: போலியோ அற்ற நாடாக இந்தியா அறிவிப்பு
- 12 திசம்பர் 2013: உருகுவே கஞ்சா போதைப்பொருள் உற்பத்தியை சட்டபூர்வமாக்கிய முதலாவது நாடானது
- 9 திசம்பர் 2013: இணையத்தில் விற்கப்படும் முடிநீக்கிகள் கண்பார்வையை பறிக்கும்: கனடா எச்சரிக்கை
வெள்ளி, சூன் 10, 2011
மாரடைப்பால் இறந்துவிடும் இதயத்தசையை மீண்டும் புதுப்பிக்கக் கூடிய புரதமருந்து ஒன்று அறிவியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாரடைப்பு நோயால் இதயத்தசை இறந்துவிடுகிறது; காலப்போக்கில் இறந்த இவ்விடத்தில் தசைப்பகுதிக்குப் பதிலாக நார் இழையங்கள் வளருகின்றன; இதனால் இதயம் தனது இயல்பான சுருங்கிவிரியும் தொழிலைப் புரிவதில் சிரமம் ஏற்படுகின்றது. இதய இலயமின்மையால் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, திடீர் இதய நிறுத்தம், இறுதியில் இதயச் செயலிழப்பு போன்ற உயிர்த் தீவிளைவுகள் ஏற்படுகின்றன.
மாரடைப்பால் இறந்துபோன இதயத்தசையை மீண்டும் குறிப்பிட்ட இடத்தில் உருவாக்கினால் இதயச் செயலிழப்பு ஏற்படாது, மாரடைப்பின் பின்னரும் குறிப்பிட்ட நபர் ஆரோக்கியமாக வாழலாம், எனினும் இயல்பான நிலையில் இறந்த இதயத்தசை இறந்ததாகவே இருக்க அவ்விடத்தில் நார் இழையங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்குத் தீர்வே இல்லையென்று நினைத்திருந்த காலம் இப்பொழுது மலையேறிவிட்டது. அறிவியலாளர்கள் புதிதாக மருந்தொன்றைக் கண்டுபிடித்து உள்ளனர், இது இறந்த இதயத்தசையை மீண்டும் உருவாக்குகின்றது.
இதயம் ஒரு தசையால் உருவாக்கப்பட்ட உறுப்பு என்பது பெரும்பாலும் அறியப்பட்ட ஒரு விடயம். இதயத்தின் இத்தசைப்பகுதியைச் சுற்றி மென்சவ்வு உள்ளது; இது இதய மேற்சவ்வு (epicardium) எனப்படும். இதயத்தசையை மீண்டும் புதுப்பிக்கத் தேவையான உயிரணுக்கள் இந்த இதய மேற்சவ்வில் உள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரு புறத்தூண்டல் ஏற்படுத்தப்படுவதன் மூலம் இவை அங்கிருந்து இதயத்தசைப் பகுதிக்கு அசைந்து பின்னர் இதயத்தசை செப்பனிடப்படுகின்றது. ஏற்கனவே பரிச்சயமான தைமொசின் பீட்டா4 (thymosin β4) எனும் புரதம் இத்தூண்டலை ஏற்படுத்தவல்லது என அறியப்பட்டது; சுண்டெலியில் இப்புரதம் கொடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, விளைவு வெற்றிகரமானதாக அமைந்தது. சுண்டெலி ஒன்றுக்கு இப்புரதம் மருந்துவடிவில் கொடுக்கப்பட்ட பின்னர் செயற்கையான மாரடைப்பு உண்டாக்கப்பட்டது, இதனால் இறந்த தசை இழையங்கள் சிலநாட்களில் மீண்டும் உருவாகின.
இலண்டன் பல்கலைக்கழகத்துப் பேராசிரியர் போல் ரைலி இது குறித்து உரையாடுகையில், மாரடைப்பு வருவதற்கு முன்னரேயே இம்மருந்து உபயோகித்தல் வேண்டும் எனத் தெரிவித்தார். இப்புரதம் மருந்துவடிவில் உருவாக்கப்பட்டு இருந்தாலும் மாந்தரின் பயன்பாட்டுக்கு வருவதற்கு இன்னமும் ஆய்வுகள் தேவை; இன்னும் பத்து வருடத்தில் இம்மருந்தின் முழுமையான பயன்பாட்டைப் பெறலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
மூலம்
[தொகு]- The heart can repair itself, new basic science suggests, தஹார்ட்.ஒர்க், சூன் 9, 2011
- 'Heart repair pill' still years away, என்எச்எஸ், சூன் 9, 2011
- http://www.bbc.co.uk/news/health-13699711, பிபிசி, சூன் 8, 2011