வொயேஜர் 1 விண்கலம் விரைவில் சூரியக் குடும்பத்தைத் தாண்டிச் செல்லவிருப்பதாக நாசா அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூன் 15, 2012

வொயேஜர் 1 மிக விரைவில் விண்மீனிடைவெளிக்குள் செல்லும் என வொயேஜர் 1 ஆளில்லா விண்கலத் திட்டத்தில் பங்கு கொண்டுள்ள அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.


வொயேஜர் விண்கலம்

ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் இந்த வொயேஜர் 1 விண்கலத்தை 1977 ஆம் ஆண்டில் விண்ணுக்கு ஏவியது. இந்த விண்கலம் எந்நேரத்திலும் நமது சூரியக் குடும்பத்தைத் தாண்டிச் செல்லக்கூடும் என நாசா தெரிவித்துள்ளது.


மிகத் தூரத்தில் உள்ள விண்மீன்களில் இருந்து வெளியேறும் உயர்-ஆற்றல் துகள்கள் வொயேஜர் விண்கலத்தைத் தாக்க ஆரம்பித்துள்ளதாக இந்த விண்கலத்தை அவதானிக்கும் வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம், இது தனது வரலாற்றுச் சிறப்பு மிக்க குறிக்கோளை விரைவில் அடையும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.


"இயற்பியல் விதிகளின் படி, மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள் ஒன்று விண்மீனிடைவெளிக்குள் செல்லுவது இதுவே முதற் தடவையாக இருக்கும், ஆனாலும் எப்போது இது நடைபெறும் என்பதை நாம் அறுதியிட்டுக் கூற முடியாதுள்ளது," கலிபோர்னியா தொழிநுட்பக் கழகத்தைச் சேர்ந்த எட் ஸ்டோன் தெரிவித்துள்ளதாக நாசாவின் அறிக்கை ஒன்று கூறுகிறது.


அண்டக் கதிர்கள் விண்கலத்தைத் தாக்கும் எண்ணிக்கையைக் கொண்டே விண்கலம் எப்போது விண்மீனிடைவெளிக்குள் செல்லும் என்பதை அறிவியலாளர்கள் கணக்கிடுவார்கள். கடந்த ஒரு மாதமாக அண்டக் கதிர்கள் தாக்கும் வேகம் மிக வேகமாக அதிகரித்திருப்பதை அறிவியலாளர்கள் அவதானித்துள்ளார்கள்.


வொயேஜர் 1 வினாடிக்கு 17 கிமீ வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இது தற்போது பூமியில் இருந்து கிட்டத்தட்ட 18 பில்லியன் கிமீ தூரத்தில் காணப்படுகிறது. இந்த விண்கலத்தில் இருந்து வெளிவரும் குறிப்பலை ஒன்று நாசாவின் ஏற்பு வலையை வந்தடைய பதினாறரை மணிக்கும் சற்றுக் கூடுதலாக எடுக்கிறது.


வொயேஜர் 1 விண்கலம் 1977 செப்டம்பர் 5 ஆம் நாள் ஏவப்பட்டது. இதனிடைய சகோதர விண்கலம் வொயேஜர் 2 1977 ஆகத்து 20 இல் ஏவப்பட்டது. இவற்றின் முதற் குறிக்கோள் வியாழன், சனி, யுரேனசு, நெப்டியூன் ஆகிய சூரியக் குடும்பத்தின் கோள்களை ஆராய்வதே. இப்பணியை அவை 1989 ஆம் ஆண்டில் நிறைவேற்றின. இதனை அடுத்து அவை நமது பால்வழி அண்டத்தின் நடுப்பகுதியை நோக்கி செலுத்தப்பட்டன. இவற்றில் இணைக்கப்பட்டுள்ள புளுட்டோனிய மின்கலங்கள் இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் செயலிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து பால்வழியில் இவை கட்டுப்பாடில்லாமல் செல்லும்.


வொயேஜர் 1 விண்கலம் ஏசி +793888 என்ற விண்மீனை நோக்கிய பயணத்தை மேற்கொண்டுள்ளது. ஆனாலும் அது அந்த விண்மீனில் இருந்து இரண்டு ஒளியாண்டுகள் தூரத்துக்கே செல்லும். வொயேஜர் 2 விண்கலம் ஒன்றை விட மெதுவாகவே செலுத்தப்படுகிறது. இது தற்போது பூமியில் இருந்து 14.7 பில்லியன் கிமீ தூரத்தில் உள்ளது. இது ரொஸ் 248 என்ற விண்மீனை நோக்கி நகருகிறது.


மூலம்[தொகு]