பின்லாந்து காற்பந்து சூதாட்டத்தில் சிங்கப்பூரர் வில்சன் பெருமாள் மீது வழக்கு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சூன் 12, 2011

காற்பந்து ஆட்டங்களை சட்டவிரோதமாக முன்கூட்டியே நிர்ணயித்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிங்கப்பூரரான வில்சன் ராஜ் பெருமாள் பின்லாந்து நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறார். பின்லாந்திலிருந்து போலிக் கடவுச்ச்சீட்டு மூலம் வெளியேற முயன்றபோது அவர் கடந்த பெப்ரவரி 24 ஆம் நாள் கைது செய்யப்பட்டார்.


காற்பந்து விளையாட்டில் பல பில்லியன் டாலர் புழங்கும் சூதாட்ட மோசடி இவரின் கைது மூலம் வெளிவந்துள்ளது. இவரைத் தவிர காற்பந்து அணி ஒன்றின் ஒன்பது முன்னாள் வீரர்களுக்கு எதிராகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சூதாட்டம் மூலம் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை இலாபமாகப் பெறப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


'கேலோங் கிங்’ என அழைக்கப்படும் வில்சன் ராஜ் பெருமாள் பின்லாந்து நீதிமன்றத்தில் பல தகவல்களை வெளியிட்டார். பின்லாந்தில் லப்லாந்து மாவட்ட நீதிமன்றத்திற்கு பலந்த்த காவலுடன் அழைத்து வரப்பட்டார். காற்பந்து சூதாட்டத்தின் முக்கிய களமாக சிங்கப்பூர் விளங்குவதாக அனைத்துலக காற்பந்து சம்மேளனம் (ஃபிஃபா) தெரிவித்தது. பின்லாந்தின் முன்னாள் சம்பியன்களான டாம்பேரே என்ற அணி ஃபீஃபா அமைப்பில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இவ்வணி சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றிடம் இருந்து $435,000 பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது. ஏன் இவ்வளவு பணம் பெறப்பட்டது என்பது குறித்து அதிகாரிகளால் விளக்கம் கொடுக்க முடியவில்லை. ஆனால் சூதாட்டமே காரணம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.


சிங்கப்பூர் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பலரும் அவருடைய சூதாட்டக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தனர். 2008 ஆம் ஆண்டில் இருந்து உலகமெங்கும் பல ஆட்டங்களை நிர்ணயித்ததாக வில்சன் ராஜ் ஒப்புக்கொண்டார். போட்டிகளை ஏற்பாடு செய்வது, வீரர்கள், நடுவர்கள் மற்றும் காற் பந்து சங்கங்களைத் தொடர்பு கொண்டு சூதாட்டத்தில் பங்கு கொள்ளச் செய்வது போன்றவை தனது பணி என அவர் தெரிவித்தார்.


ஆசிய மற்றும் ஆப்பிரிக்க அணிகளின் நட்பு ஆட்டங்கள் பற்றியும் ஃபீஃபா பெருமாளிடம் விசாரிக்கவிருக்கிறது. பின்லாந்து அணிக்காக விளையாடிய சாம்பியாவைச் சேர்ந்த இரு சகோதரர்கள் பெருமாளிடம் இருந்து சென்ற மாதம் இலஞ்சம் பெற்றுக் கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


தம் மீது சுமத்தப்பட்டுள்ள ஒரு சிலவற்றைத் தவிர பல குற்றச்சாட்டுக்களை பெருமாள் ஏற்றுக் கொண்டுள்ளதாக பெருமாளுக்காக வாதாடும் வழக்கறிஞர் பேர்ட்டி பொய்க்கோ தெரிவித்தார். இவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டும் என வழக்குத் தொட்நர்கள் வாதாடுகின்றனர்.


கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் டோகோவின் இரண்டாம் நிலை ஆட்டக்காரர்களை பக்ரைனில் நட்பு ஆட்டமொன்றுக்கு அனுப்பிய நிகழ்வில் பெருமாள் சம்பந்தப்பட்டுள்ளதாக ஃபீஃப்ஃஃ நம்புகிறது. இவ்வாட்டத்தில் பக்ரைன் அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.


மூலம்[தொகு]