உள்ளடக்கத்துக்குச் செல்

பெலருசின் அரசுத்தலைவராக லூக்கசென்கோ நான்காம் முறையாகத் தெரிவு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், திசம்பர் 22, 2010

பெலருஸ் நாட்டின் அரசுத்தலைவர் பதவிக்கு ஞாயிறன்று நடைபெற்ற தேர்தலில் தற்போதைய தலைவர் அலெக்சாண்டர் லுக்கசென்கோ மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்படதைத் தொடர்ந்து பெலருஸ் தலைநகர் மின்ஸ்க் நகரில் பல்லாயிரக்கணக்கான எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் தேர்தலில் மோசடி நடைபெற்றதாகத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.


அலெக்சாண்டர் லுக்கசென்கோ

ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்க அதிரடிப்படையினர் நகரில் குவிக்கப்பட்டுப் பலர் கைது செய்யப்பட்டனர். அரசுத்தலைவர் பதவிக்காகப் போட்டியிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர். ஒரு சிலர் காவல்துறையினரின் தாக்குதலில் காயமடைந்ததாக ப்பிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். தேர்தலில் மொத்தம் 9 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 600 பேர் வரையில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


லுக்கசென்கோவுக்கு அடுத்தபடியாக வந்த வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகள் 2.56 சதவீதம் மட்டுமே. இது மிகப் பெரிய மோசடி எனக் கூறி ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.


பொதுவாக வாக்களிப்பு முறைமைகள் நல்லபடியாகவே நடந்திருந்தாலும், வாக்குக் கணக்கீட்டு நடைபெற்ற முறையில் தமக்கு அதிருப்தியைத் தருகிறது என ஐரோப்பியத் தேர்தல் கண்காணிப்புக் குழு கருத்துத் தெரிவித்துள்ளது. வாக்குக்கணிப்பு திறந்த முறையில் இடம்பெறவில்லை, இதனால் அதன் நம்பகத்தன்மை மிகவும் குறைவே என அது தெரிவித்துள்ளது.


தனது கண்காணிப்பாளர்கள் 32 வீதமான வாக்கெடுப்பு நிலையங்களுக்குச் சமூகமளிக்க முடியவில்லை என்றும், மீதமான வாக்கெடுப்பு நிலையங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அனுமதியே வழங்கப்பட்டதாகவும் அக்குழு தெரிவித்துள்ளது. உருசிய அரசினால் அனுப்பப்பட்ட தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல் சிறந்த முறையில் இடம்பெற்றதாகக் கூறியுள்ளது. ஐக்கிய அமெரிக்கா இத்தேர்தல் முடிவுகளைத் தாம் முறையானதாகக் கருதவில்லை எனத் தெரிவித்துள்ளது.


ஆனாலும் லுக்கசென்கோ தமது நாட்டில் புகவும் பிரபல்யமானவராகக் காணப்படுகிறார். இவரது ஆட்சிக் காலத்தில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது. இரசியாவுடனான உறவு பலம் மிக்கதாக உள்ளது. இரசியாவில் இருந்து பெற்றோலியம் வாயு ஐரோப்பாவுக்கு பெலருஸ் வழியாகவே கொண்டுசெல்லப்படுகிறது.


மூலம்

[தொகு]