உள்ளடக்கத்துக்குச் செல்

லிபியாவில் தனது நடவடிக்கைகளை நிறுத்த ஐநா பாதுகாப்புச் சபை முடிவு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, அக்டோபர் 28, 2011

லிபியாவில் தனது பன்னாட்டு இராணுவக் கூட்டு நடவடிக்கையை அக்டோபர் 31 திங்கட்கிழமை முதல் நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை நேற்றிரவு முடிவெடுத்துள்ளது.


கடந்த மார்ச் மாதத்தில் லிபியாவில் பொது மக்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாதுகாப்புச் சபை நேட்டோ படையினருக்கு அதிகாரம் கொடுத்திருந்தது. அதனை அடுத்து அன்றைய தலைவர் முஅம்மர் கடாபி தனது ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்ட மக்களுக்கு எதிராகப் பதில் தாக்குதல்கள் மேற்கொண்டிருந்தார். கடாபி கடந்த வாரம் கொல்லப்பட்டதை அடுத்து நேட்டோ கூட்டுப்படையினர் தமது நடவடிக்கைகள் அக்டோபர் 31 இல் முடிவடையும் என உறுதியளித்திருந்தனர்.


லிபியாவின் புதிய அரசு நாடு விடுதலை அடைந்து விட்டதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரகடனப்படுத்தியிருந்தது. நேட்டோவின் இராணுவ நடவடிக்கை லிபியாவில் தொடர்ந்திருக்க வேண்டும் என இடைக்கால அரசு கேட்டுக் கொண்டிருந்தது. ஆனாலும் அதற்கு மாறாக ஐக்கிய நாடுகள் தமது நடவடிக்கையை நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது. பொதுமக்களைப் பாதுகாக்கும் தமது திட்டம் நிறைவடைந்து விட்டதாகவும், ஏனையை உதவிகள் வழங்குவது குறித்து வேறாக ஆராயப்பட வேண்டும் எனவும் பாதுகாப்புச் சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஐநாவின் இந்த முடிவு லிபியாவில் அமைதியான முறையில் சனநாயகத்திற்குக் கொண்டு செல்வதற்கான ஒரு மைல்கல் என ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்தார்.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]