உள்ளடக்கத்துக்குச் செல்

பால்வழியும் அந்திரொமேடா பேரடையும் 4 பில்லியன் ஆண்டுகளில் இணையும், வானியலாளர்கள் கணிப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூன் 1, 2012

ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியைக் கொண்டு எமது பால்வழியும், அதன் அயல் பேரடையான அந்திரொமேடாவும் எப்போது ஒன்றோடொன்று மோதும் என வானியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர். இவையிரண்டும் தமக்கிடையேயான ஈர்ப்புக் காரணமாக இன்னும் 4 பில்லியன் ஆண்டுகளில் இணையும் என அவர்கள் கருதுகின்றனர்.


மேலும் 2 பில்லியன் ஆண்டுகளில் அவை இரண்டும் ஒரு நாள்மீன்பேரடையாக உருவாகும். இம்மாற்றங்களினால் எமது சூரியனின் நிலையில் மாற்ற்ம் ஏற்படும், ஆனால் இதனால் சூரியனோ அல்லது அதன் கோள்களோ அழிவதற்கு மிகச் சிறிதளவு வாய்ப்புகளே உள்ளதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.


"இன்று, அந்திரொமேடா பேரடை எமது கண்களுக்கு மிகச் சிறிய ஒரு பொருளாகவே தெரிகிறது, இவ்வாறே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எமது வானியலாலர்கள் கண்டனர்," என அமெரிக்காவின் பால்ட்டிமோரில் உள்ள விண்வெளித் தொலைநோக்கி அறிவியல் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ரோய்லண்ட் வான் டெர் மாரெல் தெரிவித்தார்.


இரு பேரடைகளும் ஒன்றை ஒன்று நோக்கி ஒரு திசையில் பயணிக்கின்றன என்பது ஏற்கனவே அறியப்பட்டிருந்தது. இவை இரண்டும் 2.5 மில்லியன் ஒளியாண்டுகளால் வேறு பட்டுள்ளன. ஆனாலும் அவை கிட்டத்தட்ட 400,000கிமீ/மணி (250,000 மைல்/மணி) வேகத்தில் பயணிக்கின்றன.


அந்திரொமேடா பேரடையின் பக்கவாட்டு நகர்வு மிகத்துல்லியமாக ஹபிள் தொலைநோக்கியூடாக அவதானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கணிப்பொறி ஒப்புருவாக்கம் நடத்தப்பட்டதில் இரண்டு பேரடைகளும் இணைந்து ஒரு நீள்வட்ட அண்டமாக மாறும் எனத் தெரியவந்துள்ளது. இப்பேரடைக்குள் இருக்கும் விண்மீன்களுக்கிடையேயான தூரம் மிகவும் பெரிதாததால், விண்மீன்களுக்கு குறைந்தளவு பாதிப்பே ஏற்படும்.


அந்திரொமேடாவின் சிறிய உடன்பிறப்பான முக்கோண விண்மீன் தொகுதியும் (Triangulum galaxy, M33) இந்த இணைவில் சேரும் என வானியலாளர்கள் கருதுகின்றனர்.


மூலம்

[தொகு]