உள்ளடக்கத்துக்குச் செல்

10 புதிய யுரேனியம் செறிவூட்டல் உலைகளை அமைக்க ஈரான் திட்டம்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், திசம்பர் 1, 2009

பத்து புதிய யுரேனியம் செறிவூட்டல் உலைகளை அமைப்பதற்கு ஈரானிய அரசாங்கம் அனுமதித்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. ஈரானின் இரகசிய அணு ஆற்றல் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் ஐ.நா. அணு ஆற்றல் கண்காணிப்புப் பிரிவின் தீர்மானத்திற்கு எதிரானதொரு நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.


ஈரானின் பிரதான யுரேனியம் செறிவூட்டல் உலையான நட்டான்சின் (Natanz) அளவுக்குப் புதிய ஆலைகள் நிர்மாணிக்கப்படுமெனவும் இதற்கான வேலைகள் இரு மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படுமெனவும் அவ் ஊடகம் தெரிவித்துள்ளது.


ஈரான் வருடாந்தம் 250 முதல் 300 தொன் அணுவாயுத எரிபொருளை உற்பத்தி செய்யும் இலக்கைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஈரானிய அதிபர் அகமதி நெச்சாத் இதற்காக புதிய 10 உலைகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


ஈரானின் சர்ச்சைக்குரிய அணுவாயுதத் திட்டத்திற்கு இராஜதந்திர ரீதியிலான தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபடும் மேற்குலக நாடுகளுக்கும் ஈரானுக்குமிடையிலான பதற்றத்தை இத்தீர்மானம் மேலும் அதிகரிக்குமெனக் கருதப்படுகிறது. இந்நிலையில், ஐ.நா.வின் அணுசக்திப் பிரிவுக்கு வழங்கிவரும் ஒத்துழைப்பைக் குறைப்பதற்கான திட்டத்திற்குத் தயாராகுமாறு ஈரானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

மூலம்

[தொகு]