அலைக்கற்றை ஊழல் வழக்கு: ஐந்து பேருக்கு பிணை வழங்கப்பட்டது
- 11 பெப்பிரவரி 2024: அயோத்தி இராமர் கோயில் திறப்பு விழா
- 12 செப்டெம்பர் 2020: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 25 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று
- 25 பெப்பிரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 16 பெப்பிரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு
புதன், நவம்பர் 23, 2011
இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை (2ஜி) ஒதுக்கீடு ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஐந்து நிருவாகிகளுக்கு உச்சநீதிமன்றம் இன்று பிணை வழங்குவதாக அறிவித்துள்ளது.
சஞ்சய் சந்திரா, வினோத் கோயன்கா, கவுதம் தோஷி, ஹரி நாயர், சுரேந்திரா பிப்பேரா ஆகியோருக்கே பிணை வழங்கப்பட்டுள்ளது. 5 பேருக்கும் ஒவ்வொருவருக்கும் ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சாட்சிகளை இவர்கள் கலைக்க முயன்றால் பிணை திரும்பப்பெறப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். 5 பேருடைய கடவுச் சீட்டுகளும் நீதிமன்றத்தில் ஒப்புடைக்கப்பட வேண்டும் என்றும் அனைவரும் தில்லியிலேயே தங்கிருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கடந்த மே மாதத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதற்கிடையில், அலைக்கற்றை ஊழல் விசாரணைகள் இனிமேல் தில்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து திகார் சிறை வளாகத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக நேற்று நீதிமன்றம் அறிவித்தது.
இவ்வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 14 பேர் பேருக்கு எதிரான விசாரணை தில்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை இனி திகார் சிறையில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெறும் என தில்லி உயர்நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டது.
உயர்நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி.சைனி நேற்று தெரிவித்து, வியாழக்கிழமையில் இருந்து திகார் சிறையில்தான் விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டார். ஆனால், இதற்கான காரணத்தை அறிவிக்கவில்லை.
இந்த வழக்கை பொறுத்த வரையில் அனைவருக்கும் பிணை மறுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து சிறைக்குள்ளே நீதிமன்றத்தை நடத்த நீதிபதி எடுத்த முடிவு குற்றவாளிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதற்கு எதிராக மேல் முறையீடு செய்யப் போவதாகவும் அவர்களின் வழக்கறிஞர்கள் கூறினர்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த மாற்றம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வழக்கு விசாரணை பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெறும் நாட்களில் கனிமொழி, ஆ ராசா ஆகியோருக்கு ஆதரவாக அவர்களின் உறவினர்களும், திமுக தொண்டர்களும் நீதிமன்ற வளாகத்துக்கு வந்து அவர்களை அடிக்கடி சந்துத்துப் பேசி வந்தனர். திகார் சிறைக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டால், வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கோடு சம்மந்தப்பட்ட சாட்சிகள் போன்றோர் மட்டுமே நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
மூலம்
[தொகு]- Five granted bail in India telecoms scandal, பிபிசி, நவம்பர் 23, 2011
- 2G case trial to be shifted to Tihar Jail, இந்தியன் எக்ஸ்பிரஸ், நவம்பர் 22, 2011
- 2G spectrum trial shifted to Tihar Jail, இந்தியா டுடே, நவம்பர் 22, 2011
- 2ஜி வழக்கு விசாரணை திகார் சிறைக்கே மாற்றம்: நீதிமன்றம் திடீர் அறிவிப்பு, தினமணி, நவம்பர் 22, 2011
- விசாரணைக்கு கூட வெளியில் வர முடியாதா ? திகார் ஜெயிலில் விசாரணை; நீதிபதி அதிரடி, தினமலர், நவம்பர் 22, 2011
- 2ஜி வழக்கு விசாரணை திடீரென திகார் சிறை வளாக கோர்ட்டுக்கு மாற்றம்!, தட்ஸ் தமிழ், நவம்பர் 22, 2011