உள்ளடக்கத்துக்குச் செல்

கருநாடக மாநில முன்னாள் முதல்வர் எதியூரப்பா சிறையிலடைக்கப்பட்டார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, அக்டோபர் 16, 2011

பெங்களூரில் அரசு நிலத்தைத் தனியார் நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த விலையில் பயன்பாடுகளை மாற்றுவதற்கான அரசாணைகளைப் பிறப்பித்து, அதன் மூலம் ஆதாயமடைந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட கருநாடக மாநில முன்னாள் முதலமைச்சர் பி. எஸ். எதியூரப்பா நேற்று மாலை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இதையடுத்து அவர் பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


இந்த நில மோசடி விவகாரத்தில் எதியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா, ராகவேந்திரா, மருமகன் சோகன்குமார் உட்பட 5 பேர் மீது லோக் ஆயுக்தா வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் அவரைக் கைது செய்ய நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்து உத்தரவிட்டது. இந்த நிலையிலே நேற்று மாலை அவர் சரணடைந்தார்.


எதியூரப்பா மீதான இரும்பு மற்றும் சுரங்க ஒதுக்கீட்டில் அரசுக்கு 16 ஆயிரத்து 805 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதெனவும், சுரங்க நிறுவனத்திடம் இருந்து எதியூரப்பாவின் மகன்கள் நடத்தும் அறக்கட்டளைக்கு ரூ. 10 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது எனவும், அரசு நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கியுள்ளனர் எனவும் லோக்அயுக்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருந்தது. இதையடுத்து சூலை மாத இறுதியில் கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.


காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஊழலுக்குத் துணைபோவதாகக் குற்றம் சாட்டி கடுமையாகப் பிரசாரம் செய்துவரும் பாஜகவுக்கு, எதியூரப்பா விவகாரம் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்று அவதானிகள் கூறுகிறார்கள்.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]