அமெரிக்காவைக் கலக்கிய போபண்ணா-குரேஷி டென்னிஸ் இணை
புதன், செப்டம்பர் 15, 2010
- 30 திசம்பர் 2018: ஆத்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வு துடுப்பாட்ட போட்டியில் இந்திய அணி வெற்றி
- 17 சனவரி 2018: வட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர்கொள்ளுகின்றன
- 15 திசம்பர் 2016: கத்தார் நாடு காப்லா முறையை ஒழித்துள்ளது
- 29 நவம்பர் 2016: பிரேசிலின் கால்பந்தாட்ட குழு சென்ற வானூர்தி விபத்துக்கு உள்ளாகியதில் 75 பேர் பலி
- 18 சனவரி 2016: ஜல்லிக்கட்டு தடையால் களையிழந்த கிராமங்கள்
ரோகன் போபண்ணா, அய்சம் உல் குரேசி இணையை டென்னிஸ் ரசிகர்கள் இப்போது செல்லமாக இந்தோ-பாக் எக்ஸ்பிரஸ் என்று தான் அழைக்கிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்த அமெரிக்க ஓpபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரர்களான அமெரிக்க இரட்டையர்கள் பாப் பிரையன் மற்றும் மைக் பிரையன் ஆகியோரிடம் போராடி வீழ்ந்த இவர்களுக்கு மிகச் சிறந்த எதிர்காலம் உள்ளதாக விளையாட்டு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆண்டின் அமெரிக்க ஓபன் இந்திய ரசிகர்களுக்கு முதலில் உவப்பாக இருக்கவில்லை. உலகின் முதல் பத்து இடங்களுக்குள் இருக்கும் இந்திய வீரர்கள் மகேஷ் பூபதி மற்றும் லியாண்டர் பயஸ் இருவரும் அடுத்தடுத்து போட்டியிலிருந்து வெளியேறினர். கிராண்ட்சிலாம் போட்டிகளில் இரட்டையர் பிரிவில் மிகச்சிறந்த வீரர்களான அவர்கள் துவக்கத்திலேயே வெளியேறியது அதிர்ச்சியாக இருந்தாலும், பாகித்தானின் முதல்நிலை வீரர் அய்சம் உல் குரேசியுடன் இணைந்து விளையாடிய ரோகன் போபண்ணா முக்கிய வீரர்களைத் தோற்கடித்து தொடர்ந்து முன்னேறினார்.
கடந்த 2007 ம் ஆண்டு முதன்முதலில் இணைந்து விளையாடத் துவங்கிய இவர்கள் இருவரும் கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒரே ஒரு முறைதான் காலிறுதியை எட்டியிருந்தனர். அதுவும் கடந்த விம்பிள்டன் போட்டியில்தான். ஆனால் இந்த முறை காலிறுதியை எட்டுவதற்கே அவர்கள் பெரிய தடையைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் இரண்டாம் நிலை வீரர்களான டேனியல் நெஸ்டர் மற்றும் நேனாட் ஜிமோன்ஜிக் ஆகியோரை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வென்ற குரேசியும், போபண்ணாவும், காலிறுதியிலும் எளிய வெற்றி பெற்று அரையிறுதியில் நுழைந்தனர். காலிறுதியில் 10 வது நிலை வீரர்களான வெஸ்லி மூடி, டிக் நார்மன் ஆகியோரை நேர் செட்களில் தோற்கடித்த விதம் அனைவரையும் அவர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது குறிப்பிடத்தக்கது. அரையிறுதியில் அர்ஜெண்டின வீரர்களை வென்ற பின்னர் பட்டத்தை வெல்லும் இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் பாப் மற்றும் மைக் பிரையன் சகோதரர்களைச் சந்தித்தனர்.
இந்த ஆட்டத்தில் 7-6(5), 7-6(4) என்ற நேர் செட்களில் பிரையன் சகோதரர்கள் வெற்றி பெற்றனர். ஆனால் இப்போட்டி குறித்து பாப் பிரையன் கூறியுள்ள கருத்து கவனிக்கத்தக்கது. “இதுவரை நாங்கள் விளையாடிய போட்டிகளிலேயே இதுதான் மிகச்சிறந்த போட்டி. இவர்கள் இருவரும்(குரேஷி-போபண்ணா) நம்ப முடியாத வகையில் சிறப்பாக விளையாடுகிறார்கள். நாங்கள் அவர்களுக்கு இணையாக எங்களது ஆற்றலை அதிகரிக்க வேண்டியிருந்தது,” என்று கூறியுள்ளார் அவர். மேலும் பல கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வெற்றிக்கனியைப் பறிக்க அவர்கள் போட்டியிடுவார்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். உலகின் முதல்நிலை வீரர்களாகவும், ஒட்டுமொத்தமாக 64 இரட்டையர் பட்டங்களைப் பெற்று உலக சாதனையை நெருங்கிக் கொண்டிருப்பவர்களுமான பிரையன் சகோதரர்களின் இக்கருத்து குரேஷி-போபண்ணா இணையின் வருங்காலம் குறித்து கூறப்பட்ட கணிப்பு என்றால் அது மிகையல்ல.
ஆட்சியாளர்களின் பாதகமான கொள்கைகளால் இந்திய-பாகிஸ்தான் உறவுகள் எப்போதும் இல்லாத வகையில் சீர்குலைந்து கிடக்கும் இந்த வேளையில் மக்களிடையே நல்லுறவை வளர்க்க இந்த சகோதரர்களின் விளையாட்டு உதவக்கூடும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். அமெரிக்காவில் உள்ள உயர் அதிகாரிகள் இவர்கள் விளையாடிய போட்டிகளை நேரில் சென்று ரசித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதில் உள்ள அரசியல் ரீதியான விஷயங்கள் குறித்து போபண்ணா எதுவும் கூறவில்லை எனினும், குரேஷி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். “நாங்கள்(பாகிஸ்தானிகள்) எப்போதும் அமைதியையே விரும்புகிறோம். எங்களை பயங்கரவாதிகளாக எண்ணாதீர்கள்!” என்று இந்திய மக்களுக்கு உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார் அவர்.
மூலம்
[தொகு]- அமெரிக்க ஓபன்-பட்டம் வென்று சாதனை படைப்பார்களா போபன்னா-குரேஷி?, தட்ஸ்தமிழ், செப்டம்பர் 10, 2010