கர்நாடகத்தின் புதிய முதல்வராக சதானந்த கவுடா பதவியேற்பு
- 16 பெப்பிரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை
- 22 செப்டெம்பர் 2016: செப்டம்பர் 23 வரை காவிரியில் நீர் விடப்போதில்லை என கருநாடகா அறிவிப்பு
- 12 திசம்பர் 2013: கவலை அளிக்கும் கன்னட விக்கிப்பீடியாவின் மெதுவான வளர்ச்சி
- 29 சனவரி 2013: கமலின் ‘விஸ்வரூபம்’ திரைப்படம்: கருநாடக மாநிலத்தில் இன்று வெளியீடு
- 14 பெப்பிரவரி 2012: கர்நாடக மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் வி.எஸ். ஆச்சார்யா காலமானார்
வெள்ளி, ஆகத்து 5, 2011
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக சதானந்த கவுடா நேற்று வியாழக்கிழமை பதவியேற்றார். பெங்களூரில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இவர் கர்நாடகத்தின் 20வது முதல்வராக பொறுப்பேற்றார்.
சுரங்க மோசடி குறித்து லோக் ஆயுக்தா அறிக்கையால் முதல்வர் எதியூரப்பா, கடந்த 31 ஆம் திகதி தன் பதவியைத் துறந்ததை அடுத்து எதியூரப்பாவின் ஆதரவு பெற்ற சதானந்த கவுடாவை, பாஜக உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தங்கள் சட்ட சபை கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்தனர். முன்னாள் முதல்வர் எதியூரப்பா ஆதரித்த சதானந்த கவுடா முதல்வராவது எடியூரப்பாவுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது.
எதியூரப்பா ஆதரவு பெற்ற சதானந்த கவுடா, மற்றும் ஈஸ்வரப்பா - அனந்த குமார் ஆதரவு பெற்ற அமைச்சர் ஜெகதீஷ் செட்டரும், முதல்வர் பதவிக்காக களம் இறங்கினர். கடந்த மூன்று நாட்களாக இரு அணியினரும் தங்களுக்கு ஆதரவு இருப்பதாகக் கூறி வந்தனர். புதிய முதல்வரை இரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்ய வேண்டும் என்று மேலிட தலைவர்கள் அறிவித்தனர்.
வாக்கு எண்ணிக்கையில் சதானந்த கவுடாவுக்கு 63 வாக்குகளும் ஜெகதீஷ் ஷெட்டருக்கு 55 வாக்குகளும் கிடைத்தன. வெற்றி பெற்ற சதானந்த கவுடா கருத்துத் தெரிவிக்கையில், "கட்சிக்குள் எந்த பிளவும் இல்லை. தற்போது நடந்து வரும் திட்டங்களும், பல்வேறு புதிய திட்டங்களையும் அமுல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். எதியூரப்பா கொண்டு வந்துள்ள திட்டங்கள் நிறைவேற்றப்படும். நல்ல நிர்வாகத்தை கொண்டு வருவேன்," என்றார். இந்நிலையில் முக்கிய இலாகாக்களை தங்களுக்கு வழங்குமாறு மூத்த உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் கர்நாடகாவில் புதிய அமைச்சரவை உருவாக்குவதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்புள்ள செய்திகள்
[தொகு]- கர்நாடக முதல்வர் எதியூரப்பா பதவி விலகினார், சூலை 31, 2011
மூலம்
[தொகு]- கர்நாடக முதல்வர் சதானந்த கெளடா இன்று பதவியேற்கிறார்., தினமணி, ஆகத்து 4, 2011
- கர்நாடக அரசியலில் தொடர்ந்து குழப்பம், தினமலர், ஆகத்து 5, 2011