தர்மபுரி பேருந்து எரிப்பு: மூவரின் மரண தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஆகத்து 31, 2010

தர்மபுரி பேர்ந்து எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று அதிமுக கட்சித் தொண்டர்களின் மரண தண்டனையை இந்திய உச்சநீதிமன்றம் நேற்று உறுதி செய்துள்ளது.


2000 ஆம் ஆண்டு தர்மபுரியில் அதிமுக வினர் நடத்திய ஒரு ஆர்ப்பாட்டத்தின்போது தீ வைக்கப்பட்ட ஒரு பேருந்தில் மூன்று கல்லூரி மாணவிகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். மூன்று எதிரிகளுக்கும் கீழ் நீதிமன்றம் வழங்கியிருந்த மரண தண்டனைத் தீர்ப்பை 2007 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உறுதிசெய்திருந்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்யப்பட்டது.


இந்த வழக்கில் வேறு 25 பேருக்கு 2 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டையே உலுக்கியிருந்த இச்சம்பவத்தில் கோயமுத்தூரில் உள்ள தமிழக வேளாண் பல்கலைக்கழக மாணவிகளான கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர்.


முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் குற்றத்தை உறுதி செய்து கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி தீர்ப்பு கூறப்பட்டது. இதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் போதே தர்மபுரியில் 45 மாணவ மாணவிகள், இரண்டு ஆசிரியர்களுடன் சென்று கொண்டிருந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக தொடருந்துக்கு ஓரு கும்பல் தீ வைத்தது. இதில் கோகிலவாணி, காயத்திரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் உயிருடன் தீயில் கருகி உயிரிழந்தனர்.


இது தொடர்பாக அ.தி.மு.க.வினர் 31 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. சேலம் நீதிமன்றம் தர்மபுரி நகர அ.தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன், முன்னாள் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மாது என்ற ரவீந்திரன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முனியப்பன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. சென்னை உயர்நீதிமன்றம் 3 பேரின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.


தில்லி உச்சநீதிமணர்ம் இப்போது இத்தீர்ப்பை உறுதி செய்துள்ளது. ”அரசியல் காரணங்களுக்காக 3 அப்பாவி மாணவிகள் கொல்லப்பட்டு உள்ளனர். நிராயுதபாணிகளாக இருந்த அவர்கள் இந்த கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்த நடவடிக்கை சமூகத்துக்கு எதிரானது. காட்டுமிராண்டி தனமானது. மிகவும் கொடுமையான செயல். மாணவிகள் வந்த சுற்றுலா பேருந்துக்கு தீ வைக்கப்பட்டபோது காவல்துறையினர் அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது,” என நீதிபதிகள் தமது தீர்ப்பில் கூறியுள்ளனர்.

மூலம்[தொகு]