உள்ளடக்கத்துக்குச் செல்

கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு நிதி வழங்கியதாக செருமானியர் நாடுகடத்தப்பட்டார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், பெப்பிரவரி 29, 2012

தமிழ்நாடு மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக நடைபெற்றுவரும் மக்கள் போராட்டத்திற்கு நிதியுதவி அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட செருமானியர் ஒருவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.


நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் உருசிய நாட்டின் உதவியுடன் ரூ.13,500 கோடி மதிப்பில் தலா 1000 மெகாவாட் திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அணுமின் நிலையத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் கடந்த 7 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தியப் பிரதமர் மற்றும் இந்தியாவிற்கான உருசியத் தூதர் ஆகியோர் இப்போராட்டங்கள் வெளிநாடுகளின் நிதி உதவியுடன் நடந்து வருவதாக கூறியிருந்தனர். போராட்டக்காரர்களுக்கு சட்டவிரோதமாகப் பணம் பரிமாற்றம் செய்தாகக் குற்றம் சாட்டப்பட்டு நான்கு பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்கள் மீது இந்திய அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.


இந்நிலையிலேயே நாகர் கோவில் வடசேரியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த செருமனியைச் சேர்ந்த சோன்டெக் ரைனர் ஏர்மன் என்பவரை இந்திய உளவுத்துறையின் ஆலோசனைப்படி சென்னை கியூ பிரிவு காவல் துறையினர் கண்காணித்து வந்தனர். அவருக்குப் போராட்டக்காரர்களுடன் தொடர்பு இருப்பதாக அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டு கடந்த திங்கட்கிழமை அன்று அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.


இதே வேளையில், கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானதா என்பதை ஆய்ந்தறிய தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு தனது அறிக்கையினை தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் செவ்வாய்க் கிழமை சமர்ப்பித்தது. குழுவினர் அறிக்கை பற்றிய விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.


மூலம்

[தொகு]