சென்னையில் மகாபோதி சங்கம் மீது தாக்குதல், புத்த பிக்குகள் காயம்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சனவரி 26, 2011

சென்னை, எழும்பூரில் உள்ள இலங்கை மகாபோதி சங்கத்தின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியதில் ஒரு புத்த பிக்கு உட்பட ஐவர் காயம் அடைந்துள்ளதாக சென்னைக் காவல்துறையினர் தெரிவித்தனர். அங்குள்ள கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டு வாகனமும் சேதப்படுத்தப்பட்டது.


கடந்த 22-ம் தேதி தமிழக மீனவர் ஒருவரை இலங்கை கடற்படை சுட்டுக்கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தான் இந்த தாக்குதல் நடந்திருக்கக்கூடும் என்று காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.


இத்தாக்குதல் கடந்த திங்கள் அன்று இரவு 1000 மணியளவில் நடத்தப்பட்டது. இலங்கை அரசு இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள அந்நாட்டு தூதரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் உள்ள மகாபோதி சங்கம் தாக்குதலுக்கு பின் வேறு சில காரணங்கள் உள்ளன. இது இலங்கையில் மத மோதல்கள் ஏற்படுத்தும் நோக்கோடு நடத்தப்பட்டுள்ளது. இதை நம்பி யாரும் அவர்கள் வீசிய வலையில் சிக்கிவிட வேண்டாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.


அதே வேளை சென்னை வந்துள்ள இந்தியாவுக்கன இலங்கைத் தூதர் காரியவசம், இந்தியாவைப் போலவே தனது நாடும் மீனவர்கள் கொல்லப்படுவது குறித்து கவலையடைந்துள்ளதாகத் தெரிவித்தார். பன்னாட்டுக் கட‌ல் எ‌ல்லையை இ‌ந்‌திய ‌மீனவ‌ர்க‌ள் தா‌ண்டினாலு‌ம் அவர்கள் கொல்லப்படக்கூடாது, தாக்கக் கூடாது என்றே இலங்கை விரும்புவதாக அவர் கூறினார். அத்துடன் சென்னைக்குச் செல்லும் இலங்கைப் பயணிகளுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு இலங்கைத் தூதர் கோரிக்கை விடுத்துள்ளார்.


கடந்த பத்து நாட்களில் இலங்கைக் கடற்படையினரால் 2 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியானதால் அங்கு பதட்டமானதொரு சூழல் நிலவுகிறது. ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

மூலம்[தொகு]