நில ஆக்கிரமிப்புத் தொடர்பாக மு. க. ஸ்டாலின் மீது வழக்கு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, திசம்பர் 3, 2011

முன்னாள் துணை முதலமைச்சரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் உட்பட 5 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் பதிவு செய்துள்ள வழக்கு குறித்து விளக்கமளிக்க மு.க. ஸ்டாலின் நேற்று வெள்ளிக்கிழமை தாமாகவே முன்வந்து சென்னையில் உள்ள காவல்துறைத் தலைவர் அலுவலகத்துக்குச் சென்றார்.


சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தை மு க ஸ்டாலினும் அவரின் மகன் உதயநிதி ஸ்டாலினும் ஆக்கிரமித்துக்கொண்டதாக ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த சேஷாத்ரி குமார் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வியாழக்கிழமையன்று முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. இது தொடர்பாக விளக்கமளிக்கவே சென்னை காவல்துறைத் தலைவர் அலுவலகத்துக்கு மு.க. ஸ்டாலின் வழக்குரைஞர்களோடு சென்றார்.


பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த ஸ்டாலின் என் மீது போடப்பட்டிருக்கிற வழக்கு பொய் வழக்கு. அதாவது நிலஅபகரிப்பு என்ற பெயரிலே சொல்லப்பட்டிருக்கிற அந்த வழக்கைப் பொறுத்தவரையில் அந்த சொத்துக்கும் எனக்கும், என்னுடைய குடும்பத்தில் உள்ள யாருக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. அந்த வீட்டைப்பொறுத்த வரையில், என்னுடைய மகன் உதயநிதி அவர் தொழில் செய்துக்கொண்டிருக்கிற சினிமா கம்பெனி பெயரிலே, வாடகை அடிப்படையில் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு பெற்றுள்ளார். அதிலே என்னுடைய மகளும், மருமகனும் குடியிருக்கிறார்களே தவிர, வேறு எந்த தொடர்பும் அந்த வீட்டைப் பொறுத்தவரையில் எங்களுக்குக் கிடையாது. எனவே அந்த புகார் தந்திருக்கக்கூடிய அந்த நபர் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த கோரிக்கையை எடுத்துச் சொல்லியிருக்கிறேன். என்னைக் கைது செய்யப்பட்டும் என்று கேட்டுக் கொள்ளத்தான் டிஜிபி அலுவலகத்துக்கு வந்தேன். அங்கு உயர் அதிகாரிகள் யாரும் இல்லை. அங்கு கீழ்நிலை அதிகாரிகள் தான் இருந்தனர். எனவே அவர்களிடம் என்னை கைது செய்யுங்கள் என்று சொன்னபோது, அவர்கள் எந்தவித பதிலும் சொல்லவில்லை. எனவே தங்கள் தரப்பு நியாயத்தை சொல்லிவிட்டு வந்திருக்கிறோம். உண்மையில் நிலப்பறிப்பு பற்றி முதலமைச்சர் ஜெயலலிதா மீதுதான் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். என் மீதான புகார்களை நீதிமன்றத்தில் சட்டப்படி சந்திப்பேன்,' என்றார்.


மூலம்[தொகு]