துருக்கியில் குர்தியப் போராளிகளின் தாக்குதலில் 10 படையினர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், செப்டெம்பர் 3, 2012

துருக்கியில் ஈராக், சிரிய எல்லைப்பகுதியில் குர்தியப் போராளிகளின் தாக்குதல் ஒன்றில் 10 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக துருக்கியப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் ஏழு படையினர் காயமடைந்தனர். 20 போராளிகளும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டதாக சிர்னாக் மாகாண ஆளுனர் தெரிவித்தார்.


நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் மோதல் வெடித்ததாகவும், தொடர்ந்து அங்கு சண்டை இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


குர்தியர்களுக்கு தென்கிழக்கு துருக்கியில் 1984 ஆம் ஆண்டு முதல் தன்னாட்சி கோரிப் போராடி வரும் பிகேகே எனப்படும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த போராளிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் கடந்த ஆண்டு முதல் மோதல் அதிகரித்துள்ளன.


பிகேகே கட்சியை ஒரு தீவிரவாதக் குழுவாக அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் வகைப்படுத்தியுள்ளன. தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ள போராளிகள் குர்திய மக்களுக்கு கலாசார உரிமைகளையும் கூட்டமைப்புக்குள் தன்னாட்சி கோரிப் போராடுவதாகவும் அறிவித்துள்ளனர்.


மூலம்[தொகு]