உள்ளடக்கத்துக்குச் செல்

டாக்காவில் ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து, நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, நவம்பர் 25, 2012

வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தினால் குறைந்தது 112 பேர் கொல்லப்பட்டனர். பலரைக் காணவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.


நேற்று சனிக்கிழமை இரவு டாக்காவின் புறநகர்ப் பகுதியான அசுலியாவில் பல அடுக்கு மாடிகளைக் கொண்ட தொழிற்சாலை ஒன்றில் தீப்பற்றியது. தீயில் இருந்து தப்பிப்பதற்காக மாடியில் இருந்து கீழே குதித்த சிலரும் உயிரிழந்தனர். கட்டடத்தின் கீழ்மாடியில் முதலில் தீப்பிடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. தீக்கான காரணம் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், மின்னொழுக்குக் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே தீ முழுமையாக அணைக்கப்பட்டது.


தொழிற்சாலையில் அவசர வெளியேற்றப் பகுதி அமைக்கப்பட்டிருக்கவில்லை என தீயணைப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


வங்காளதேசத்தில் ஏறத்தாழ 4,500 ஆடைத் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர். இந்நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்தில் தைத்த ஆடைகளின் ஏற்றுமதி மொத்த ஏற்றுமதியில் 80 விழுக்காடு ஆகும்.


ஆடைத் தொழிற்சாலைகளில் தீப்பற்றுவது அடிக்கடி இடம்பெறும் நிகழ்வுகள் என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். 2010 டிசம்பரில் இதே பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலைத் தீ விபத்தில் 25 பேர் கொல்லப்பட்டனர்.


மூலம்

[தொகு]