துடுப்பாட்டம்: இலங்கை அணி ஆசியக் கோப்பையை வென்றது

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மார்ச்சு 9, 2014

வங்காளதேசத் தலைநகர் டாக்காவில் நேற்று நடைபெற்ற 2014 ஆசியக் கிண்ணத் துடுப்பாட்ட இறுதிப் போட்டியில் பாக்கித்தான் அணியை ஐந்து இலக்குகளால் இலங்கை அணி வென்று ஐந்தாவது தடவையாக ஆசியக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது.


நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் அணி முதலில் துடுப்பாடி 50 பந்துப் பரிமாற்றங்களுக்கு ஐந்து இலக்குகளை இழந்து 260 ஓட்டங்களைப் பெற்றது. ஃபவாத் அலாம் 114 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கையின் வேகப் பந்து வீச்சாளர் அசித் மாலிங்க 56 ஓட்டங்களுக்கு அனைத்து அந்து இலக்குகளையும் கைப்பற்றினார்.


இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் லகிரு திரிமான்ன 101 ஓட்டங்களைக் குவித்தார். இது அவரது மூன்றாவது ஒரு நாள் சதம் ஆகும். மூத்த ஆட்டக்காரர் மகேல ஜெயவர்த்தன 75 ஓட்டங்களை எடுத்தார். மற்றுமொரு மூத்த ஆட்டக்காரரான குமார் சங்கக்கார எந்த ஓட்டமும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.


இம்முறை ஆசியக் கிண்ணப் பந்தயத்தில் தான் விளையாடிய ஐந்து ஆட்டங்களில் அனைத்திலுமே இலங்கை வெற்றி பெற்றிருந்தது. 2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற் தடவையாக இலங்கை அணி ஆசியக் கோப்பையை வென்றுள்ளது. இலங்கை அணியின் ஐந்தாவது ஆசியக் கிண்ண வெற்றி, இந்திய அணியின் வெற்றியை சமப்படுத்தியது.


மூலம்[தொகு]