தென்சீனக் கடல் பகுதிக்கான உரிமை தொடர்பான சர்ச்சை விரிவடைகிறது
- 7 சனவரி 2018: ஈரானிய எண்ணெய் கப்பல் சீன சரக்கு கப்பலுடன் மோதியதில் 32 பேரை காணவில்லை
- 16 திசம்பர் 2016: அமெரிக்காவின் ஆளில்லா இயக்க நீர்மூழ்கியை தென் சீனக் கடலில் சீனா கைப்பற்றியது
- 13 அக்டோபர் 2016: சீனா: 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 22 பேர் பலி
- 2 சூன் 2015: சீனாவில் யாங்சி ஆற்றில் கப்பல் கவிழ்ந்ததில் 456 பேர் மூழ்கினர்
- 9 ஏப்பிரல் 2015: தைவான் முன்னாள் அதிபருக்கு ஆயுள் தண்டனை
திங்கள், திசம்பர் 3, 2012
சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் பகுதியில் தனது பிரதேசம் என உரிமை கோரும் சீனா தற்போது அப்பிரதேசத்துக்குள் செல்லும் வெளிநாட்டுக் கப்பல்கள் அனைத்தையும் சோதனை செய்யத் திட்டமிட்டிருப்பதாக அறிவித்திருப்பதை பிலிப்பீன்சு நாடு கண்டித்துள்ளது.
"சீனாவின் இந்தத் திட்டமிட்ட நடவடிக்கை சட்டவிரோதமானது, தென்சீனக் கடல் பிரதேசத்தின் முழுப் பகுதிக்கும் சீனா இவ்வாறு உரிமை கோருவது அனைத்து நாடுகளுக்கும் ஒரு அச்சுறுத்தல்," என பிலிப்பீன்சின் வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. சீனாவின் இந்தப் புதிய சட்டம், சீனாவின் கைனான் மாகாணத்து எல்லைக் காவல் படையினர் வெளிநாட்டுக் கப்பல்களை வழிமறிக்க, உட்புகுந்து சோதனையிட, பறிமுதல் செய்ய, மற்றும் வெளியேற்ற வழி செய்கிறது.
ஆட்சி எல்லை குறித்த தமது உரிமை கோரலை சுமுகமாகத் தீர்த்து வைக்க பிலிப்பீன்சு ஏனைய நாடுகளின் உதவியைக் கோரியுள்ளது. தென்சீனக் கடல் பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய ஸ்பிரால்ட்டி தீவுகளுக்கு உரிமை கோரும் ஏனைய நாடுகளான வியட்நாம், மலேசியா, புருணை ஆகிய நாடுகளுடன் பிலிப்பீன்சு இம்மாதம் இது குறித்துப் பேச்சுக்களில் ஈடுபடவுள்ளது. இந்தப் பிணக்குகள் ஆசியாவிலேயே எந்த நேரத்திலும் பெரிதாகக் கூடிய பிரச்சினையாக நோக்கப்படுகிறது. சீன மக்கள் குடியரசும், சீனக் குடியரசும் இந்த முழுமையான கடல் பரப்பும் தங்களுடையதாக உரிமை கொண்டாடுகின்றனர். இவர்களது ஒன்பது புள்ளி எல்லைக்கோடு இந்தப் பகுதியில் உள்ள அனைத்து நாடுகளின் உரிமைகளுடன் குறுக்கிடுகிறது.
இதற்கிடையில் எண்ணெய் வளம் அதிகம் காணப்படும் இப்பிரதேசத்தில் 2015 ஆம் ஆண்டுக்குள் ஆண்டொன்றுக்கு 15 பில்லியன் கனமீட்டர் இயற்கை வாயுவை அகழ்ந்தெடுக்க சீனா திட்டமிட்டுள்ளதாக அந்நாடு இன்று அறிவித்துள்ளது. இந்த அறிவித்தல் இப்பிரதேசத்தில் முறுகல் நிலையை மேலும் அதிகரிக்கும் என அவதானிகள் கருதுகின்றனர்.
மூலம்
[தொகு]- China says gas output from S China Sea to reach 15 bcm by 2015, பிசினெஸ் ரெக்கோர்டர், டிசம்பர் 3, 2012
- South China Sea maritime dispute escalates, அல்ஜசீரா, டிசம்பர் 1, 2012
- Asean chief Surin Pitsuwan warns on China's ship patrol plan, பிபிசி, நவம்பர் 30, 2012