உள்ளடக்கத்துக்குச் செல்

கமலின் ‘விஸ்வரூபம்’ திரைப்படம்: செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக முதல்வர் உரையாற்றினார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சனவரி 31, 2013

கலவரங்கள் வெடிக்கக்கூடுமென உளவுத்துறைத் தந்த தகவலின் அடிப்படையிலேயே சட்டம், ஒழுங்கினைப் பாதுகாக்கும் பொருட்டு விஸ்வரூபம் திரைப்படத்திற்குத் தடை விதிக்கப்பட்டதாக தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா தெரிவித்தார்.


சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர், இசுலாமிய அமைப்புகளும் நடிகர் கமல் ஹாசனும் ஒரு உடன்படிக்கையினை கொண்டுவர முற்பட்டால் அந்தப் பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் எனத் தெரிவித்தார். இத்திரைப்படத்தினை இசுலாமிய அமைப்புகளைச் சார்ந்த தலைவர்களுக்கு கமல் ஹாசன் முன்கூட்டியே திரையிட்டுக் காட்டியிருந்தால், இந்த சிக்கல்களை வராமல் தவிர்த்திருக்கலாம் என அவர் கருத்து தெரிவித்தார்.


கமல் ஹாசன் மீது தனக்கு மனவெறுப்பு எதுவும் கிடையாது என தெரிவித்த அவர், சொந்த விருப்பு – வெறுப்புகளின்பேரில் தடை உத்தரவினை தாம் பிறப்பிக்கவில்லை எனவும் கூறினார். "பேச்சுரிமைக்கு முட்டுக்கட்டை போடும் பேச்சுக்கே இடமில்லை" என்றும் அவர் கூறினார்.


செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் ஜெயலலிதா மேலும் பேசுகையில், "சட்டம், ஒழுங்கிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் ‘மிகவும் உண்மை’. இசுலாமிய அமைப்புகள் பல தமது எதிர்ப்புப் போராட்டங்களை அறிவித்திருந்தார்கள். எனது அரசின் முதன்மையான நோக்கம், அமைதியை நிலைநாட்டுவதாகும். தமிழகத்தின் முதலமைச்சர் என்ற முறையில் எனது முதல் மற்றும் தலையாய முன்னுரிமை – சட்டம், ஒழுங்கினை பாதுகாப்பதும் அமைதி நிலவுவதை உறுதி செய்வதுமாகும். படம் திரையிடப்படும் 524 திரையரங்குகளுக்கு பாதுகாப்புதரும் அளவிற்கு காவல்துறையில் போதிய ஆள்பலம் இல்லை," என்றார்.


செய்தியாளர்களை சந்திப்பதற்கு முன்னதாக, உயர் அதிகாரிகளின் கூட்டம் ஒன்றினை முதல்வர் நடத்தியிருந்தார்.


மூலம்

[தொகு]