சீனாவின் அரசுத்தலைவராக சீ சின்பிங் அதிகாரபூர்வமாகப் பதவியேற்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மார்ச்சு 15, 2013

சீனாவில் அரசுத்தலைவர் ஒருவர் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தெடுக்கப்படும் நடைமுறைக்கேற்ப புதிய அரசுத்தலைவராக (சனாதிபதி) சீ சின்பிங் சீன நாடாளுமன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் அதிகாரபூர்வமாக நேற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


சீ சின்பிங் ஆளும் பொதுவுடைமைக் கட்சியின் தலைவராக கடந்த ஆண்டு நவம்பரில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 12வது சீன தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத்தொடரின் 4வது முழு அமர்வு நேற்று முற்பகல் 9 மணிக்கு சீன மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்றது. நாட்டின் புதிய தலைவர்களைத் தேர்ந்தெடுத்து அரசவை அமைப்புகளின் சீர்திருத்தம் மற்றும் கடப்பாட்டு மாற்றம் பற்றிய தீர்மானம் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. சுமார் 3,000 பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கூ சிங்தாவுக்குப் பதிலாக சீ சின்பிங் சீன மக்கள் குடியரசின் தலைவராகவும் சீன மக்கள் குடியரசின் மத்திய இராணுவ கமிட்டியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


புதிய பிரதமர் இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவிருக்கிறார். தற்போதைய பிரதமர் வென் சியாபாவுக்குப் பதிலாக லெ கெக்கியாங் பிரதமராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


சீனாவின் மூத்த புரட்சித் தலைவர் சீ சோங்சுன் என்பவரின் மகனான 59 வயது சீ சின்பிங், செச்சியாங், சங்காய் நகர கட்சித் தலைவராக செயற்பட்டு கடந்த 2007 ஆம் ஆண்டில் நிலைக்குழு உறுப்பினராக பொறுப்பேற்றார். ஊழலுக்கு எதிரானவராகவும் அரசியல் மற்றும் வணிகப் பொருளாதார நிலைகளில் திறந்த மனதுடையவராகவும் அறியப்படுகிறார். கட்சித் தலைமைப் பொறுப்பை இவர் கடந்த ஆண்டு எடுத்த பின்னர், சீன அரசுத் தலைமைகளின் ஆடம்பர வாழ்க்கை குறித்து விமர்சனத்தை வெளியிட்டதோடு அரச அதிகாரிகளுக்கான சிக்கன நடவடிக்கையையும் முன்னெடுத்தார்.


புதிதாகப் பதவியேற்ற பின்னர் சீன அரசுத் தலைவர் சீ சின்பிங் நேற்றுப் பிற்பகல் உருசியத் தலைவர் பூட்டினுடன் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டார். சீன அரசுத் தலைவராக சீ சின்பிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்குப் பூட்டின் வாழ்த்துத் தெரிவித்ததோடு, சீனா இடைவிடாமல் வளர்ந்து, சீன மக்கள் இன்பமாக வாழ வேண்டும் என்றும் வாழ்த்துத் தெரிவித்தார். சீ அரசுமுறைப் பயணமாக விரைவில் உருசியா செல்லவிருக்கிறார். அரசுத்தலைவராக இவரது முதல் வெளிநாட்டுப் பயணம் இம்மாத இறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு இடம்பெறவுள்ளது. பிரிட் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அங்கு செல்கிறார்.


12வது சீன தேசிய மக்கள் பேரவையின் கூட்டத்தொடர் ஞாயிற்றுக்கிழமை அன்று நிறைவடைகிறது.


மூலம்[தொகு]