கிருட்டிணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் விக்கிப்பீடியா பயிலரங்கம்
- 5 ஏப்பிரல் 2016: பனாமா பேப்பர் விவகாரம் உலகின் அதிகாரமிக்கவர்களின் வரி ஏய்ப்பை காட்டியுள்ளது
- 23 திசம்பர் 2015: அண்டத்தின் அழகி பட்டம் தவறுதலாக பிலிப்பைன்சு அழகிக்கு பதில் கொலம்பியா அழகிக்கு தரப்பட்டது
- 9 ஏப்பிரல் 2015: கோவையில் பெப்ரவரி 2010 இல் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு
- 1 ஏப்பிரல் 2015: பெரியார் பல்கலைக்கழகத்தில் நூறு மாணவர்கள் பங்கேற்ற விக்கியூடக மின் ஆவணவாக்கப் பயிலரங்கம்
- 25 மார்ச்சு 2015: சேலம் நடுவண் சிறையில் தமிழ்க்கணிமை, திறவூற்று மென்பொருள் பயிலரங்கம்
திங்கள், மார்ச்சு 18, 2013
இதழியல் துறையில் பணிவாய்ப்பு குறித்தும், தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் குறித்தும் பயிலரங்கு, சென்ற வியாழக்கிழமை மார்ச் 14 இல் இல் கிருட்டிணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் கல்வியில் பின்தங்கியுள்ள நிலையில் கிருட்டிணகிரி மாவட்டம் உள்ளது. இங்குக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கான பணி வாய்ப்பு மிகவும் குறைவு. இச்சூழலில், கிருட்டிணகிரி அரசு ஆண்கள் கலைக் கல்லூரியில், கலையியல் புலத்தில் இளநிலை மற்றும் முதுநிலை மற்றும் ஆய்வு நிலை மாணவர்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் உலகளாவிய கட்டற்ற கலைக் களஞ்சியமான விக்கிப்பீடியா தொகுத்தல், இதழியல் பணி சார்ந்த வாய்ப்புகள் குறித்த பயிற்சி , பயிலரங்கம் நடத்தப்பட்டது.
காலை 10 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இப்பயிலரங்கில் பேராசிரியர். இரா. வெங்கடேசன் வரவேற்புரை நிகழ்த்தினார். கிருட்டிணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி முதல்வர் பேராசிரியர். க. பச்சமுத்து, தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பயிற்சியின் தேவை குறித்தும், இதழியல் பயிற்சி வாய்ப்புகள் குறித்தும் தலைமையுரையில் விளக்கினார். இயற்பியல் துறைத்தலைவர் பேராசிரியர். சு. சுந்தரம், கணித்த துறை இணைப்பேராசிரியர். சா. மூர்த்தி, தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர். நா. பழனி வேலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பத்திரிகையாளர் இரா. மலர் அமுதன் பயிற்சி நோக்க உரையில் பயிற்சியின் வடிவமைப்பு, அமர்வு, மாணவர்களின் ஊடாட்டத்தின் தேவை குறித்து விளக்கினார்.
இப்பயிலரங்கின் முதல் அமர்வில், பெரியார் பல்கலைக் கழக இதழியல் துறை பேராசிரியர் மா.தமிழ்ப்பரிதி, விக்கிப்பீடியாவின் தோற்றம் வளர்ச்சி , தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் மற்றும் தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருள்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருள்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் ஆகிய பொருண்மைகளில் சிறப்புரையாற்றி , செய்முறைப் பயிற்சி அளித்தார்.
இப்பயிலரங்கின் இரண்டாம் அமர்வில், பத்திரிகையாளர் இரா. மலர் அமுதன் பத்திரிகைகள் குறித்த புரிதலை ஏற்படுத்துவது, பத்திரிகை செய்திகளுக்கு எதிர்வினையாற்றுவதன் மூலம் பொதுக் கருத்தை உருவாக்க முயற்சிப்பது, அதற்காகத் தங்கள் வசிப்பிடம் சார்ந்து செயல்படுவதை ஊக்குவிப்பது, பத்திரிகைகளில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை அறிமுகப்படுத்துவது, பணியாற்றுவதற்கான பயிற்சி முறைகள் குறித்த செய்திகளைத் தெரிவிப்பது என்னும் ஆகிய பொருண்மைகளில் சிறப்புரையாற்றி , மாணவர்களோடு உரையாற்றினார்.
பயிலரங்கின் இறுதியில், பேராசிரியர் முனைவர் சிவப்பிரியா நன்றியுரை நிகழ்த்தினார். கல்லூரியின் அனைத்துத் துறைப்பேராசிரியர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்வை அ முதல் ஆ ஊடக அமைப்பு வடிவமைத்தது. கிருட்டிணகிரியைச் சேர்ந்த ஆர்காட் தொண்டு நிறுவனம் நிகழ்ச்சிக்கான உதவியைச் செய்தது.
தமிழக அரசு மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணியை வழங்கியிருக்கும் இன்றையச்சூழலில், கிருட்டிணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரி மாணவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவை அறியவும், இதழியல் வரலாற்றையும், அதன் பயன்பாட்டையும் அறிய இந்நிகழ்வு உதவியதாக தெரிவித்துள்ளனர்.
-
பேரா.க.பச்சமுத்து தலைமையுரை
-
பேரா. இரா. வெங்கடேசன் வரவேற்புரை
-
பேரா. சு. சுந்தரம் வாழ்த்துரை
-
பேரா.மா.தமிழ்ப்பரிதி விக்கிப்பயிற்சி அளித்தல்
-
மாணவர்களின் ஊடாட்டம்