இலங்கைப் பிரச்சினை: மத்திய காங்கிரசு அரசுக் கூட்டணியில் இருந்து திமுக விலகியது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மார்ச்சு 19, 2013

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் தீர்மானத்தில் கடுமையான வாசகங்களுடன் கூடிய திருத்தம் செய்ய இந்திய நடுவண் அரசு நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டி மத்திய அரசுக் கூட்டணியில் இருந்து உடனடியாக விலகுவதாக திமுக தலைவர் மு. கருணாநிதி இன்று அறிவித்துள்ளார்.


திமுகவின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சிக்கு இனிமேல் ஆதரவளிக்கப்போவதில்லை. மேலும் திமுகவின் ஐந்து அமைச்சர்களும் தமது பதவிகளைத் துறப்பர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


திமுக தனது ஆதரவை விலக்கிக் கொண்டாலும், ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


மத்திய அரசில் இருந்தும் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தும் விலகுவதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்ததைத் தொடர்ந்து, தொண்டர்கள் நூற்றுக்கணக்கில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கூடி, பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.


ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் போர் குற்றங்கள் குறித்து சர்வதேச சுயாதீன விசாரணை கோரும் திருத்தத்தை இந்தியா கோராவிட்டால் நடுவண் அரசுக் கூட்டணியில் இருந்து திமுக விலகும் என தலைவர் கருணாநிதி கடந்த வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தார்.


திமுகவின் வெளியேறல் குறித்து நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்துக் கூறுகையில், "தி.மு.க தலைவர் கருணாநிதி ஒரு மூத்த தலைவர். அவரது அறிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. தி.மு.க.வின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும்," என்றார்.


இந்திய நாடாளுமன்றத்தில் மொத்த உறுப்பினர்கள் 543. காங்கிரசுக் கட்சிக்கு 206 உறுப்பினர்கள் உள்ளனர். பெரும்பான்மைக்கு 272 பேரின் ஆதரவு தேவை. இதில் காங்கிரசுக் கூட்டணியின் பலம் 266 ஆக இருந்தது. கடந்த ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் 19 பேர் கூட்டணியில் இருந்து விலகியதால் கூட்டணியின் பலம் 247 ஆக குறைந்தது. அப்போது அஜித் சிங்கின் லோக் தளம் கட்சி 5 உறுப்பினர்களுடன் கூட்டணியில் சேர்ந்தது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரசும் நடுவண் அரசை வெளியில் இருந்து ஆதரவு அளித்தன.


தற்போது திமுக வெளியேறிவிட்டதால் காங்கிரசு கூட்டணியின் பலம் 229 ஆகக் குறைந்து விட்டது. இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்குத் தாம் தொடர்ந்து அதரவு அளிப்போம் என்று கூறியுள்ளார். அடுத்த ஆண்டு அங்கு தேர்தல்கள் நடக்கவிருக்கிறது.


மூலம்[தொகு]