புது தில்லி: வன்புணர்வுக்குள்ளான சிறுமிக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது
- 11 பெப்பிரவரி 2024: அயோத்தி இராமர் கோயில் திறப்பு விழா
- 12 செப்டெம்பர் 2020: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 25 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று
- 25 பெப்பிரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 16 பெப்பிரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு
ஞாயிறு, ஏப்பிரல் 21, 2013
இந்தியத் தலைநகர் புது தில்லியில் இன்னொரு வன்புணர்வு நிகழ்வு நடந்துள்ளது. 5 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு வன்புணர்வுக் கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட நிகழ்வு, நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் தலைநகரில் கடந்த 2 நாட்களாக தெருப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு புதுதில்லி மருத்துவ அறிவியலுக்கான அனைத்திந்திய கல்விக்கழக (எய்ம்சு) மருத்துவமனையில் தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமியின் உடல்நிலையில் முன்னேற்றம் தெரிவதாக மருத்துவக் குழு அறிக்கை விடுத்துள்ளது.
கிழக்கு தில்லியின் காந்தி நகரில் 5 வயது சிறுமி கடந்த திங்கட்கிழமை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போனார். இச்சிறுமி இரு நாட்கள் கழித்து 17ஆம் தேதியன்று பூட்டப்பட்டிருந்த வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டார். மிகுந்த காயங்களுடன் அரற்றிக் கொண்டிருந்த குழந்தையை பெற்றோர் காவல்துறையினரின் உதவியுடன் அருகிலிருந்த சுவாமி தயானந்த் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறுமியை சோதித்துப் பார்த்த மருத்துவர்கள், ‘வன்புணர்வு மற்றும் உடல்ரீதியான கடுமையான தாக்குதலுக்கு’ சிறுமி உட்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து கொண்டனர். உடனடியாக அறுவை சிகிச்சையும் நடந்தது. மேலதிக சிகிச்சைக்காக வெள்ளிக்கிழமை பிற்பகலில் இச்சிறுமி ‘எய்ம்சு’ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
குழந்தையொன்று பாலியல் வன்கொடுமைக்குள்ளான செய்தி தரும் அதிர்ச்சி ஒருபுறம் இருக்க, புகாரை காவற்துறை கையாண்டவிதம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. சிறுமி காணாமல் போனதாக தாங்கள் குடுத்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் காவற்துறை காலந்தாழ்த்திவிட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சிறுமி மீட்கப்பட்ட மறுதினம் (வியாழக்கிழமை) மாலை நேரத்தில் காவற்துறையினர் சிலர் தன்னிடம் 2000 ரூபாய் பணத்தினைத் தந்து, ‘நடந்த நிகழ்வுகளை யாரிடமும் சொல்லவேண்டாம்’ எனப் பணித்ததாக சிறுமியின் தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன், சுவாமி தயானந்த் மருத்துவமனையில் நுழைந்து இளைஞர்கள் போராட்டம் நடத்தியபோது, 17 வயது மாணவி ஒருவரின் கன்னத்தில் காவற்துறை உயர் அதிகாரியொருவர் அறைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பீகார் மாநிலம், முசாபர்பூரைச் சேர்ந்த மனோஜ் குமார் (22) என்ற இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
தலைநகரில் இடம்பெற்ற வேறொரு நிகழ்வில், 19-வயதுப் பெண்ணொருவர் கடந்த புதன்கிழமை அன்று கும்பல் ஒன்றினால் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த டிசம்பரில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் புது தில்லியில் கும்பல்-வன்புணர்வுக்குள்ளாகி படுகொலை செய்யப்பட்டார். இந்நிகழ்வை அடுத்து இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்தன.
மூலம்
[தொகு]- வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: ஐ.நா. கண்டனம், தினமணி, ஏப்ரல் 21, 2013
- பலாத்காரம் செய்தால் மரண தண்டனை: சுஷ்மா ஸ்வராஜ், தினமணி, ஏப்ரல் 21, 2013
- வார்த்தைகள் போதாது; செயல் தேவை, தினமணி, ஏப்ரல் 21, 2013
- 5 வயதுச் சிறுமி பாலியல் பலாத்காரம்: பிரதமர் வேதனை, தினமணி, ஏப்ரல் 20, 2013
- Condition of 5-yr-old stable, protests against rape in capital, தி இந்து, ஏப்ரல் 20, 2013
- Pranab, Ansari call for introspection, தி இந்து, ஏப்ரல் 20, 2013
- Protests erupt in Delhi; rape accused nabbed in Bihar, தி இந்து, ஏப்ரல் 20, 2013
- Protesters gherao Delhi police HQ, Shinde's residence, தி இந்து, ஏப்ரல் 20, 2013
- Delhi outrage over child rape, police ‘callousness’, தி இந்து, ஏப்ரல் 19, 2013
- 'Raped' Delhi five-year-old in a critical condition, பிபிசி, ஏப்ரல் 19, 2013