சிரியத் தலைநகர் டமாசுக்கசு மீது இசுரேல் ஏவுகணைத் தாக்குதல்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மே 5, 2013

சிரியத் தலைநகர் டமாசுக்கசில் இரவு இடம்பெற்ற குண்டுவெடிப்புகளுக்கு இசுரேல் ஏவிய ஏவுகணைகளே காரணம் என சிரியா இசுரேல் மீது குற்றம் சாட்டியுள்ளது.


ஜம்ராயா ஆய்வு மையம் மீது ஏவுகணைகள் வீழ்ந்ததாக சிரிய ஊடகங்கள் எழுதியுள்ளன. இந்த ஆய்வு மையம் வேதியியல் ஆயுதங்களைத் தயாரித்து வருவதாக மேற்குலக நாடுகள் தெரிவித்து வந்துள்ளன.


இத்தாக்குதலை இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி இசுரேலிய வானொலி உறுதிப்படுத்தியுள்ளது. லெபனானின் எஸ்புல்லா போராளிகளுக்கு ஆயுதங்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் மீதே தாக்குதல் நடத்தியதாக இசுரேல் தெரிவித்துள்ளது.


கடந்த இரு நாட்களில் இசுரேல் சிரியா மீது நடத்திய இரண்டாவது தாக்குதல் இதுவாகும். வெள்ளியன்று லெபனான் எல்லைப் பகுதியில் ஏவுகணைகளைக் கொண்டு சென்ற கப்பல் மீது இசுரேல் வான் தாக்குதலை மேற்கொண்டது.


சிரியப் பிரச்சினையில் இசுரேலின் நேரடி தலையீடு அதிகரித்து வருவதையே நேற்றைய தாக்குதல்கள் காட்டுவதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


சிரியாவின் கரையோர நகரான பனியாசில் சுணி முசுலிம்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்படப் பலர் கொல்லப்பட்டனர்.


2011 மார்ச்சு மாதத்தில் ஆரம்பமான உள் நாட்டுப் போரில் இது வரையில் சுமார் 70,000 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர்.


மூலம்[தொகு]