உள்ளடக்கத்துக்குச் செல்

சீனாவில் 5,000 ஆண்டுகள் பழைமையான எழுத்துகளைக் கொண்ட கற்கோடாலிகள் கண்டுபிடிப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சூலை 11, 2013

சீனாவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான கற்கோடாலிகள் இரண்டில் உலகின் ஆரம்பகால தொல் எழுத்துகள் காணப்படுவதாக சீனத் தொல்பொருளாய்வாளர்கள் கூறியுள்ளனர்.


சீனாவின் சங்காய் நகருக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட இப்பொருட்கள் குறைந்தது 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என அறிவியலாளர்கள் கருதுகின்றனர். ஆனாலும், இப்பொருட்களில் காணப்படும் குறியீடுகள் உண்மையில் எழுத்துகளா அல்லது வெறும் சின்னங்களா என்பதில் சீன ஆய்வாளர்களிடையே முரண்பாடான நிலை காணப்படுகிறது.


2003 முதல் 2006 வரை சங்காயின் தெற்கே பெருமளவு தொன்மைக் கற்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இவற்றில் சிலவற்றிலேயே எழுத்துகள் இருக்கக் காணப்பட்டுள்ளன. இவற்றை ஆராய்ந்து தமது கண்டுபிடிப்புகளை வெளியிடுவதற்கு ஆய்வாளர்களுக்கு பல ஆண்டுகள் பிடித்துள்ளதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். இக்கண்டுபிடிப்புகள் சீனாவுக்கு வெளியேயிருந்தான ஆய்வாளர்களால் மதிப்பீடு செய்யப்படவில்லை.


"கற்கோடாலிகளில் காணப்பட்டுள்ள எழுத்துகளைத் தம்மால் துல்லியமாக படித்து, அவற்றின் அர்த்தத்தை அறிய முடியாவிட்டாலும், இவை ஒரு குறிப்பிட்ட வகை சொற்கள் என எம்மால் கூற முடியும் என தொல்லியல் ஆய்வாளர் சூ சின்மின் செய்தியாளர்களிடம் கூறினார்.


ஆனாலும், எம்முடிவையும் எடுப்பதற்கு இவர்களிடம் போதுமான ஆதாரங்கள் இல்லை என சங்காயின் பூடான் பல்கலைக்கழக தொல்பொருள் ஆய்வாளர் லியூ சாவோ தெரிவித்தார்.


இவை உணமையாக இருக்கும் பட்சத்தில், சீனாவில் முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட 3,300 ஆண்டுகள் பழமையான விலங்கு எலும்புகளின் மீதான எழுத்துகளை விடப் பழமையானதாக இவை இருக்கும்.


உலகின் மிகப்பழைய எழுத்துகள் கிமு 3,300 ஆண்டுகளுக்கு முன்னதான மெசப்பத்தோமியா காலத்தையது என நம்பப்படுகிறது.

மூலம்

[தொகு]