உள்ளடக்கத்துக்குச் செல்

பீகாரில் பள்ளி உணவு உட்கொண்ட 22 மாணவர்கள் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூலை 17, 2013

கிழக்கிந்திய மாநிலமான பீகாரில் பள்ளி ஒன்றில் இலவசமாக வழங்கப்பட்ட உணவை உட்கொண்டதால் குறைந்தது 22 மாணவர்கள் உயிரிழந்தனர், மேலும் 28 பேர் கடும் சுகவீனமுற்ற நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.


தலைநகர் பட்னாவில் இருந்து வடக்கே தர்மசாத்தி கண்டமான் என்ற கிராமத்திலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.


இந்தியாவில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் வறுமையைப் போக்குவதற்கும், மாணவர் வருகையை ஊக்குவிப்பதற்காகவும் இலவச மதிய உணவு வழங்கப்படுகிறது. ஆனாலும், இவை போதுமான அளவு சுத்தமானதாக இருப்பதில்லை எனக் குற்றம் சாட்டப்படுகின்றது.


இறந்த பிள்ளைகளின் பெற்றோரும் உறவினர்களும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதில் நான்கு காவல்துறை வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இறந்த ஒவ்வொரு பிள்ளையினதும் குடும்பத்தினருக்கு 200,000 ரூபா நட்டத்தொகை வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.


உணவில் பொசுபரசு கலந்திருந்தமை ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக மாநிலக் கல்வி அமைச்சர் கூறியுள்ளார். மரக்கறி அல்லது அரிசியில் நச்சுக் கிருமிநாசினி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாக உயர் கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


பள்ளிகளில் இலவச உணவு வழங்கும் திட்டம் இந்தியாவில் சென்னையிலேயே முதன்முதலாக 1925-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.


மூலம்

[தொகு]