உள்ளடக்கத்துக்குச் செல்

ஷேன் வார்ன் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வெடுக்க முடிவு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மே 6, 2011

ஆத்திரேலியாவின் பிரபலமான சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் தொழில் ரீதியான துடுப்பாட்டங்களில் இருந்து ஓய்வெடுக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார். இந்திய ஐபிஎல் போட்டிகளின் அடுத்த தொடரில் தான் விளையாடப் போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.


ஷேன் வார்ன்

41 வயதான ஷேன் வார்ன் இத்தகவலைத் தனது டுவிட்டர் கணக்கில் தெரிவித்திருக்கிறார். இவர் தற்போது ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிப் பயிற்சியாளராக விளங்குவதுடன் அவ்வணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடியும் வருகிறார்.


"இன்னும் நான்கு அல்லது ஐந்து போட்டிகளே விளையாட இருக்கிறேன்" என அவர் எழுதியுள்ளார்.


அடுத்த திங்கள் அன்று ராஜஸ்தான் அணி சென்னை அணியுடன் மோதவிருக்கிறது. வார்னின் கடைசி ஆட்டம் மே 20 இல் மும்பை அணிக்கு எதிராக இருக்கும். ராஜஸ்தான் அணி இத்தொடரில் இறுதிப் போட்டிக்குத் தெரிவானால் மேலும் இரண்டு ஆட்டங்களில் இவர் விளையாடுவார்.


பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் இருந்து 2007 ஆம் ஆண்டில் இளைப்பாறிய ஷேன் வார்ன் 708 தெரிவு விக்கெட்டுகளையும், 293 ஒரு-நாள் விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருக்கிறார். முதல் தரப் போட்டிகளில் இருந்து 2008 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.


1991 ஆம் ஆண்டில் முதல் தரப் போட்டிகளில் விளையாடத் தொடங்கிய வார்ன் இவ்வாண்டுக்கான ஐபிஎல் தொடரில் ஒன்பது போட்டிகளில் 11 இலக்குகளை வீழ்த்தியுள்ளார்.


போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், ராஜஸ்தான் அணிக்கு பயிற்சியாளராகத் தொடர்ந்து பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


மூலம்

[தொகு]