வடமாகாண சபையின் முதலமைச்சராக சி. வி. விக்னேசுவரன் அரசுத்தலைவர் முன்னிலையில் பதவியேற்றார்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், அக்டோபர் 7, 2013

இலங்கையின் வட மாகாண சபையின் முதலாவது முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் இன்று காலையில் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச முன்னிலையில் கொழும்பில் அலரி மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார்.


வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன்

இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம். ஏ. சுமந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, புளொட் தலைவரும் வட மாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், மற்றும் விக்னேசுவரனின் குடும்ப அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


அரசுத் தரப்பில் பிரதமர் டி. எம். ஜயரத்ன, வட மாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறி, அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர, ராஜித சேனாரத்ன, மைத்திரபால சிறிசேன, திச விதாரண, ரவூப் அக்கீம், ஏ.எல்.எம்.அதாவுல்லா, ஏ.எச்.எம்.அசுவர், டக்ளசு தேவானந்தா ஆகியோரும், பிரபா கணேசன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர். ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்கவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.


விக்னேசுவரன் தமிழில் சத்தியப் பிரமாணம் செய்தார். அரசுத்தலைவர் முன் பதவிப்பிரமாணம் செய்வது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவும் சூழலில் இந்தப் பதவிப் பிரமாண வைபவம் நடந்திருப்பதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


பதவியேற்றல் நிகழ்வின் பின்னர் முதலமைச்சர் விக்னேசுவரன் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை அளித்தார். "இனங்களுக்கிடையே எழுந்துள்ள சந்தேகங்களை அகற்றுவது காலத்தின் தேவையாக அமைந்துள்ளது. அதன் ஒரு கட்டமாகவே நாட்டின் சனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யத் தீர்மானித்தோம்," என்று தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


"என்னுடைய பதவி வடமாகாண மக்கள் எனக்களித்த பதவியாகும். தூரநோக்கின் அடிப்படையிலும் குறுகிய நோக்கின் அடிப்படையிலும் பணியாற்றும் படி அவர்கள் எனக்கு ஆணை வழங்கியுள்ளார்கள். தூரநோக்கு எமது தனித்துவத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. அதனை அடைய நாம் எமது கடந்த காலப் போராட்டங்கள், அரசியல் அணுகுமுறைகள், அனுபவங்கள் யாவற்றிலிருந்தும் பாடங்களைக் கற்றே முன்னேற வேண்டி உள்ளது. எமது செயற்பாடு ஐக்கிய இலங்கைக்குள்ளேயே நாம் அரசியல் தீர்வொன்றை எதிர்பார்க்கின்றோம் என்ற எமது மனோநிலையை எடுத்துக் காட்டக்கூடியதாய் அமைந்துள்ளது."


"போருக்குப் பின்னரான எமது மக்களின் தேவைகளை காலதாமதம் இன்றி பூர்த்தி செய்வதான குறுகிய நோக்கை உதவுவதாகவும் எமது செயற்பாடு அமைந்துள்ளது. சிங்கள மக்கள், பாதிக்கப்பட்ட எமது தமிழ் பேசும் மக்களின் வாழ்க்கையில் விடிவை ஏற்படுத்த தம்மாலான சகலதையும் தமது பிரதிநிதிகள் மூலம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்."


"உள்ளக சுயநிர்ணயம் ஒருநாட்டை பிரிவுபடுத்தாமல் ஒற்றுமைப்பாதையில் கொண்டு செல்லக்கூடும் என்ற உண்மையை எமது சிங்கள சகோதர சகோதரிகள் தமது அரசியல்வாதிகளுக்கு இடித்துரைக்க முன்வரவேண்டும். சிங்களமொழியும் பாரம்பரியங்களும் சிங்கள மக்களுக்கு எந்த அளவு முக்கியமோ அதே அளவு எமது மொழியும் எமது பாரம்பரியங்களும் எமக்கும் முக்கியம் என்பதை சிங்கள மக்கள் உணர்ந்து செயலாற்றவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்."


"இங்கு வன்முறைக்கு இடமில்லை. பலாத்காரத்திற்கு இடமில்லை. புரிந்துணர்வு ஒன்றே எம்மை சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் நோக்கிச் செல்ல வழிவகுக்கும். எனவே என்னுடைய இன்றைய செயற்பாடு இரு இன பொது மக்களையும் ஒன்றுபடுத்த உறுதுணையாக அமைவதாக! இறைவன் ஆசி சகலருக்கும் கிடைப்பதாக!" என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்சீத் இரண்டு நாள் அதிகாரபூர்வப் பயணமாக இன்று இலங்கை வந்தடைந்திருக்கிறார். 13வது சட்டதிருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது குறித்து குர்சித் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இவர் நாளை செவ்வாய்க்கிழமையன்று யாழ்ப்பாணம் செல்லவுள்ளார். அங்கு அவர் முதலமைச்சர் விக்னேசுவரன், ஆளுனர் ஜி. ஏ. சந்திரசிறி ஆகியோரைச் சந்தித்து உரையாடுவார்.


மூலம்[தொகு]