அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 200 பேர் பங்கேற்ற தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, அக்டோபர் 12, 2013

தலைமையுரையாற்றும் பேராசிரியர் மா.தமிழ்ப்பரிதி
தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்க வரவேற்புப் பதாகை

கல்லூரி மாணவர்களுக்குத் தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப்பணிகளில் ஈடுபாட்டை ஏற்படுத்துதல், தமிழ் விக்கிப்பீடியா குறித்த செய்முறை விளக்கம் அளித்தல், ஐயங்களைதல் என்னும் நோக்கங்களின் அடிப்படையில், கும்பகோணத்திலிருந்து 6 கிமீ தொலைவில் உள்ள கோயிலாச்சேரியில் உள்ள அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், காட்சித்தொடர்பியல் துறையின் சார்பில் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம், இக்கல்லூரியின் கருத்தரங்கக்கூடத்தில் 11.10.2013 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 5.00 மணி வரை அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இபபயிலரங்கில் காட்சித்தொடர்பியல் துறை மற்றும் கணிப்பொறி அறிவியல் துறையைச்சார்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.


இந்நிகழ்வில் முதலாமாண்டு மாணவர் அருள் பிரான்சிஸ் வரவேற்புரையும், அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர்.ச. மணி சிறப்புரையும், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்களில் கல்லூரி மாணவர்களின் பங்கேற்பு குறித்து சேலம், பெரியார் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை பேராசிரியர். மா. தமிழ்ப்பரிதி தலைமையுரையும், முதலாமாண்டு மாணவர் ப.சிவராமன் நன்றியுரையும் நிகழ்த்தினர்.


இந்நிகழ்வில், தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் , தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் குறித்த நேரிடை செயல்முறைப்பயிற்சி அளிக்கப்பட்டது.


இந்நிகழ்வில், அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசிரியர்கள் க. துரைசாமி, ஐஸ்வரியா, கணேஷ், ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.

படக்காட்சியகம்[தொகு]