உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசியாவில் இசுலாமியர் அல்லாதோர் 'அல்லா" என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்குத் தடை

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், அக்டோபர் 14, 2013

மலேசியாவில் முசுலிம் அல்லாதோர் கடவுளை 'அல்லா" என அழைப்பதற்கு அந்நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதன் மூலம் 2009 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட தீர்ப்பை செல்லுபடியற்றதாக்கியுள்ளது.


அல்லா என்ற சொல் இசுலாமுக்கு மட்டுமே உரித்தானது எனக் கூறியிருக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றம், இது மீறப்படுமானால் நாட்டில் அமைதியின்மை ஏற்படும் என எச்சரித்துள்ளது.


பொதுவாக மலேசியாவில் கிறித்தவர்கள் தமது கடவுளை மலாய் மொழியில் அல்லா எனவே வழங்குகின்றனர். அரபி மொழியில் இருந்து மலாய் மொழிக்கு அல்லா என்ற சொல் வந்ததாக, பல நூற்றண்டுகளாக தாம் தமது கடவுளை விளைக்க அல்லா என்ற சொல்லையே பயன்படுத்தி வந்ததாக கிறித்தவர்கள் வாதிடுகின்றனர். இன்றைய தீர்ப்பு தமது அடிப்படை உரிமையில் தலையிடுவதாகும் என அவர்ரக்ள் கூறுகின்றனர்.


2009 ஆண்டு தீர்ப்பை அடுத்து நாடெங்கும் கிறித்தவர்களுக்கும், முசுலிம்களுக்கும் இடையே கலவரங்கள் மூண்டன. கிறித்தவ ஆலயங்களும், பள்ளிவாசல்களும் சேதமாக்கப்பட்டன.


கத்தோலிக்க பதிப்பகமான "எரால்டு" தனது வாரப் பத்திரிக்கையில் "அல்லா" என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று உள்துறை அமைச்சு தடை விதித்தது. இதனை எதிர்த்து எரால்டு பத்திரிகை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது. பத்திரிகைக்கு சார்பாக 2009 இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து மலேசிய அரசு மேன்முறையீடு செய்ததில் தற்போது 2009 தீர்ப்பு தவறானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது.


கத்தோலிக்க திருச்சபை முஸ்லிம் மக்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறுவதை ஊக்குவிக்கின்றது என்று அங்குள்ள முஸ்லிம் குழுக்கள் சந்தேகிக்கின்றனர் என பிபிசி செய்தியாளர் கூறுகிறார். இத்தகைய மதமாற்ற நகர்வு மலேசியாவில் சட்ட விரோதமானதாகும்.


மூலம்

[தொகு]