ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்ததில் 45 பயணிகள் உயிரிழப்பு
- 28 மே 2015: இந்தியாவில் வெப்ப தாக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1500க்கும் அதிகமாகியுள்ளது
- 28 திசம்பர் 2013: ஆந்திரப் பிரதேசத்தில் தொடருந்து தீப்பற்றியதில் 23 பேர் உயிரிழப்பு
- 31 அக்டோபர் 2013: ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்ததில் 45 பயணிகள் உயிரிழப்பு
- 31 சூலை 2013: இந்தியாவின் 29வது மாநிலமாக தெலுங்கானாவை உருவாக்க நடுவண் ஆளும் கூட்டணி முடிவு
- 22 பெப்பிரவரி 2013: இந்தியாவின் ஐதராபாத் நகரத்தில் இரட்டைக் குண்டுவெடிப்பு, 16 பேர் உயிரிழப்பு
வியாழன், அக்டோபர் 31, 2013
இந்தியாவின் தென் மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் சொகுசுப் பேருந்து திடீரெனத் தீப்பிடித்ததில் அதில் பயணம் செய்த 45 பேர் உயிருடன் தீயில் கருகி மாண்டனர். ஓட்டுநர் உட்பட நான்கு பேர் எரிகாயங்களுடன் தப்பினர்.
பெங்களூர் நகரில் இருந்து ஐதராபாதுக்கு சென்று கொண்டிருந்த இப்பேருந்து ஐதராபாதில் இருந்து 140 கிமீ தூரத்தில் மாபுப்நகர் மாவட்டத்தில் உள்ள கொத்தக்கோட்டா என்ற நகரிலேயே இவ்விபத்து ஏற்பட்டது. குளிரூட்டப்பட்ட வொல்வோ ரகப் பேருந்தின் எண்ணெய்த் தாங்கியை மதகு ஒன்று தாக்கியதை அடுத்தே அது தீப்பற்றியது. இவ்விபத்து நேற்று புதன்கிழமை அதிகாலையில் 05:00 மணியளவில் நிகழ்ந்தது.
இக்கோர விபத்து நிகழ்ந்த போது பயணிகள் பலர் உறக்கத்தில் இருந்தனர். என்ன நடைபெற்றது என அறியும் முன்னரே அவர்களை தீ சூழ்ந்து கொண்டது. பேருந்தின் கதவுகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு சில பயணிகள் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு வெளியே பாய்ந்தனர். பயணிகள் பலர் இருக்கைகளிலேயே இறந்து கிடந்தனர். இறந்தவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும்.
தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்த கணினிப் பொறியாளர்களே உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
தகவலறிந்து மெகபூப் நகரில் இருந்து மூன்று தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன ஆனாலும், அதற்குள் பேருந்து முழுவதுமாக எரிந்து சாம்பலானது.
2008 ஆம் ஆண்டில் வட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் பேருந்து ஒன்று தீப்பிடித்ததில் 60 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
மூலம்
[தொகு]- Bus fire in southern India leaves 42 dead, பிபிசி, அக்டோபர் 30, 2013
- 45 killed as bus goes up in flames on Hyderabad-Bangalore highway, தி இந்து, அக்டோபர் 31, 2013