உள்ளடக்கத்துக்குச் செல்

சீன விண்கலம் வெற்றிகரமாக நிலவில் இறங்கியது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, திசம்பர் 15, 2013

சீனாவின் ஜேட் ராபிட் என்ற தானியங்கி விண்ணுலவி சாங் ஏ-3 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்து நிலவில் தரையிறங்கியது. இதன் மூலம் சந்திரனில் மென்மையாகத் தரையிறங்கும் மூன்றாவது நாடாக சீனா வந்துள்ளது. 1976 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நிலவில் மெதுவாகத் தரையிறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.


சாங்'ஏ-3 கலம் தரையிறங்கியது நிலவின் வடக்கு அரைக்கோளத்தில் உள்ள வானவில் விரிகுடா என்ற எரிமலைச் சமவெளிப் பகுதியாகும். இதற்கு முன் ஆய்வுக்கலம் எதுவும் இப்பகுதிக்கு வரவில்லை.


டிசம்பர் 2 இல் ஏவப்பட்ட சாங்'ஏ-3 விண்கலம் ஓராண்டு வரை நிலவில் தங்கியிருக்கும், அதே வேளையில் ஜேட் ராபிட் விண்ணுளவி மூன்று மாதங்களுக்குப் பணியாற்றும்.


நேற்று 1300 மணி ஜிஎம்டி (1200 பீஜிங்கு) நேரத்தில் சாங்'எ-3 விண்கலம் நிலவில் தரையிறங்க ஆரம்பித்து, 11 நிமிடங்களில் அது தரையைத் தொட்டது.


மணிக்கு 200 மீட்டர் வேகத்தில் நிலவில் உலவவிருக்கும் 120 கிகி எடையுள்ள ஜேட் ராபிட் விண்ணுளவி 30 பாகை சாய்வான தளத்திலும் செல்லக்கூடியதாக இருக்கும்.


விண்கலமும் விண்ணுலவியும் சூரிய ஆற்றலினால் இயங்கினாலும், புளுட்டோனியம்-238 உடன் கூடிய கதிரியக்கசமதானிகளைக் கொண்ட வெப்பவாக்கிகளையும் அது கொண்டு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் அவை குளிரான இரவிலும் சூடாக இருக்கக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது.


இவ்விண்ணுளவி மூன்று மாதங்கள் வரை நிலவில் உலவி அறிவியல் தகவல்களைச் சேகரிப்பதுடன், கனிமங்கள் ஏதும் இருக்கின்றனவா என்பது பற்றியும் ஆராயும்.


நிலவில் மென்மையாகத் தரையிறங்குதல் மிகவும் சிக்கலான விண்வெளி நடவடிக்கை. சோவியத் ஒன்றியம் 12 முறை முயற்சி மேற்கொண்ட பின்னரே வெற்றி பெற்றது. அமெரிக்காவும் 3 முறை தோல்விகளை சந்தித்துள்ளது.


மூலம்

[தொகு]