வியட்நாமில் சீனர்களுக்கு எதிராகக் கலவரம், பல்லாயிரக்கணக்கான சீனர்கள் வெளியேற்றம்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மே 18, 2014

வியட்நாமில் சீன மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து அங்குள்ள சீனக் குடிமக்களை வெளியேற்றுவதற்காக ஐந்து கப்பல்களை சீனா அனுப்பியுள்ளது.


ஏற்கனவே 3,000 பேர் வெளியேற்றப்பட்டு விட்டனர் என சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடுமையாகக் காயமடைந்த 16 பேர் விமானம் மூலம் அனுப்பப்பட்டனர்.


சர்ச்சைக்குரிய தென்சீனக் கடலில் சீனா எண்ணெய் அகழ்வில் ஈடுபட்டதை அடுத்தே அங்கு கலவரங்கள் வெடித்தது. இரண்டு சீனத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். சட்டவிரோத எண்ணெய் அகழ்வையடுத்து கடந்த வாரம் வியட்நாமிய, சீனக் கடற்படைக் கப்பல்களிடையே மோதல்கள் இடம்பெற்றன. பராசெல் தீவுகளுக்கு மேற்கே தாம் தொடர்ந்து எண்ணெய் அகழ்வாய்வில் ஈடுபடப் போவதாக சீனா அறிவித்துள்ளது. சீனாவினால் நிருவகிக்கப்படும் இப்பகுதிக்கு வியட்நாமும் உரிமை கோரி வருகிறது.


கடந்த சில நாட்களில் கலவரக்காரர்கள் குறைந்தது 15 வெளிநாட்டுத் தொழிற்சாலைகளுக்கு தீ வைத்து சேதப்படுத்தினர். இவை சீன, தாய்வான், மற்றும் தென் கொரிய நிறுவனங்களுக்குச் சொந்தமானவையாகும்.


மூலம்[தொகு]