உள்ளடக்கத்துக்குச் செல்

சூறாவளி ஹையான்: பிலிப்பீன்சில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, நவம்பர் 10, 2013

பிலிப்பீன்சைத் தாக்கிய ஹையான் சூறாவளியின் தாக்கத்தினால் தக்கிளோபான் நகரில் மட்டும் 10,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் கிழக்கே உள்ள இந்நகரில் வீடுகள், பாடசாலைகள், விமான நிலையம் ஆகியன முற்றாகச் சேதமடைந்தன. பிலிப்பீன்சைத் தாக்கிய சுறாவளி இப்போது வியட்நாமை நோக்கி நகருவதாகவும், அங்கு வடக்கு மாகாணத்தில் 600,000 வரையில் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


பிலிப்பீன்சின் மெயிட் மாகாணத்தின் தலைநகர் தக்கிளோபானுக்கு அருகாமையில் உள்ள சமார் தீவில் 300 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர் எனவும், மேலும் 2,000 பேரைக் காணவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இறந்தவர்களின் எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனாலும் 151 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.


குடிநீர், மின்சாரம், மற்றும் உணவுக்கு அங்கு பெரும் தட்டுப்பாடு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிவாரணப் பொருட்கள் விநியோகம் செய்வதில் தாம் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக அவர்கள் கூறினர்.


சூறாவளி ஹையான் வியட்நாமை திங்கட்கிழமை பிற்பகலில் தாக்கக்கூடும் என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


மூலம்

[தொகு]