உள்ளடக்கத்துக்குச் செல்

2014 உலகக்கோப்பை காற்பந்து: செருமனி நான்காவது தடவையாக உலகக்கோப்பையை வென்றது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூலை 14, 2014

பிரேசிலில் நடைபெற்ற 2014 உலகக்கோப்பைக் காற்பந்துத் தொடரின் நேற்றைய இறுதிப்போட்டியில் செருமனி அணி அர்ச்சென்டீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று நான்காவது தடவையாகக் கோப்பையைக் கைப்பற்றியது. அமெரிக்கக் கண்டங்களில் ஓர் ஐரோப்பிய அணி, உலகக்கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை ஆகும்.


செருமனி அணி உலகக்கோப்பையுடன்

90 நிமிட நேர ஆட்டத்தில் எந்த அணியும் கோல் போடாமல் சமநிலையில் முடிந்ததால், கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இரண்டாவது கூடுதல் நேரத்தின் 113 வது நிமிடத்தில் மரியா கோட்சே கோல் அடிக்க, ஆட்டத்தை இரசித்துக் கொண்டிருந்த செருமனியின் அரசுத்தலைவர் அங்கிலா மெர்க்கல் உட்பட அனைவரும் எழுந்து நின்று ஆரவாரம் செய்தனர். ஆட்டத்தை சமப்படுத்த அர்ச்சென்டீனா எடுத்த முயற்சிகள் எதுவும் கைகூடவில்லை. அர்ச்சென்டீனாவின் நட்சத்திர வீரர லியோனல் மெசி மிகவும் சிறப்பாக ஆடியிருந்தாலும், செருமனியின் எதிர்த் தாக்குதலை அவ்வணியினால் எதிர்கொள்ள முடியவில்லை. இறுதியில் செருமனி 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வென்றது.


மொத்தம் நடந்த 64 ஆட்டங்களில் 171 கோல்கள் மொத்தமாக அடிக்கப்பட்டன. சிறந்த கோல் காப்பளராக செருமனியின் மனுவேல் நோயரும். தொடரின் மிகச்சிறந்த விளையாட்டு வீரராக அர்ச்செண்டினாவின் லியோனல் மெசியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிக கோல் அடித்தவருக்கான தங்கக் காலணி விருது கொலம்பியாவின் ஜேம்சு ரொட்ரிகசுக்கு வழங்கப்பட்டது. சிறந்த இளம் ஆட்டக்காரராக பிரான்சின் பவுல் பொக்பா தெரிவு செய்யப்பட்டார்.


ரியோ டி ஜெனெய்ரோ மரக்கானா விளையாட்டரங்கத்தில் நேற்றைய இறுதிப்போட்டி நடைபெறும் முன்னர் அங்கு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கொலம்பியாவைச் சேர்ந்த பொப் பாடகி ஷகீரா, மெக்சிகோவின் கித்தார் கலைஞர் சான்டனா, பிரேசிலின் பாடகி ஐவெட் சாங்கலோ மற்றும் பலர் இசை விருந்து படைத்தனர்.


அடுத்த உலகக்கோப்பை காற்பந்து போட்டி 2018 ஆம் ஆண்டு உருசியாவில் நடைபெறவுள்ளது.


மூலம்

[தொகு]