உச்சநீதிமன்றம் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேரின் இடைநீக்கத்தை விலக்கி உத்தரவிட்டது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, பெப்பிரவரி 13, 2016

2015 ஆண்டு மார்ச் 31 அன்று தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் பேரவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.


தமிழக சட்டப்பேரவையில் 2015, பிப்ரவரி 19ஆம் தேதியன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் கடம்பூர் ராஜு எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தை விமர்சனம் செய்ததால் ஏற்பட்ட விவாதத்தை தொடர்ந்து, தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முன்வரிசைக்கு வந்து பேரவைத் தலைவர் இருக்கையைச் சூழ்ந்தனர். பேரவைத் தலைவரை தாக்க முயன்றதுடன், அவைக் காவலர்களும் தாக்குதலுக்கு உள்ளாகினர். உடனடியாக தேமுதிகவின் 19 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்தப் பிரச்னையை அவை உரிமைமீறல் குழுவுக்கு அனுப்புவதாக பேரவைத் தலைவர் ப.தனபால் உத்தரவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக 2015, பிப்ரவரி 20, மார்ச் 27 ஆகிய தேதிகளில் அவை உரிமை மீறல் குழு கூடி விவாதித்தது. அந்தக் குழுவின் அறிக்கை சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 31-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு ஆறு சட்டமன்ற உறுப்பினர்களை மட்டும் இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.


சட்டப்பேரவையில் பதிவு செய்யப்பட்ட காணொளி ஆதாரங்களின் அடிப்படையிலேயே தேமுதிகவின் ஆறு சட்டமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வதற்கு, அவை உரிமை மீறல் குழு முடிவு செய்ததாக அந்தக் குழுவின் கூட்ட நடவடிக்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த காணொளி இடைநீக்கம் செய்யப்பட்ட ஆறு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவர்கள் காணொளியை கோரிய போதும் காட்டப்படவில்லை.


இடைநீக்கத்தை எதிர்த்து அழகாபுரம் ஆர். மோகன்ராஜ், வி.சி. சந்திரகுமார், கே. தினகரன், சி.எச்.சேகர், எஸ்.ஆர். பார்த்திபன், எல். வெங்கடேசன் ஆகிய ஆறு தேமுதிக உறுப்பினர்களும் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.


இந்த மனுவை நீதிபதிகள் செலமேஸ்வர், அபய் மனோகர் சாப்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அவர்கள் இந்த இடைநீக்கத்தை விலக்கியதுடன் ஆறு உறுப்பினர்களுக்கும் நிறுத்தி வைக்கப்பட்ட ஊதியம், பிற சலுகைகள் போன்றவற்றை திரும்ப வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர்.




மூலம்[தொகு]