பன்னாட்டுப் போட்டிகளில் நூறாவது சதமடித்து சாதனை படைத்தார் சச்சின் டெண்டுல்கர்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மார்ச்சு 16, 2012

பன்னாட்டுப் போட்டிகளில் நூறாவது சதம் அடித்து சாதனை படைத்தார் இந்திய துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர்.


வங்காளதேசத்தில் நடந்துவரும் 2012 ஆசியக் கிண்ணத் துடுப்பாட்டத் தொடரில் இன்று வங்காளதேச அணிக்கு எதிராக மிர்புர் நகரில் உள்ள ஸ்ரீ பங்களா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி சார்பில் துடுப்பெடுத்தாடிய சச்சின் டெண்டுல்கர் பன்னாட்டுப் போட்டிகளில் தனது நூறாவது சதத்தைப் பூர்த்தி செய்தார். ஆனாலும் வங்காளதேச அணி இந்திய அணியை 5 இலக்குகளால் தோற்கடித்தது.


இப்போட்டியில் சச்சின் 138 பந்துகளில் 10 நான்கு ஓட்டங்கள் மற்றும் ஒரு ஆறு ஓட்டத்துடன் சேர்த்து ஒரு நாள் துடுப்பாட்ட போட்டிகளில் தனது 49வது சதத்தைப் பெற்றார். ஏற்கனவே இவர் தேர்வுத் துடுப்பாட்டங்களில் 51 சதங்களைக் குவித்துள்ளார். இதன் மூலம் பன்னாட்டுப் போட்டிகளில் முதன் முறையாக 100 சதங்களைப் பெற்ற முதலாவது வீர்ர என்ற சாதனையைப் பெற்றார். வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் அவர் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். அதே நேரம் இன்றைய போட்டியில் முதல் எல்லையை அடித்தபோது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 2,000 எல்லைகளை அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.


இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 289 ரன் குவித்தது. டோனி 21, ஜடேஜா 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 290 என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. தொடக்க வீரர் நஜிமுதீன் 5 ஓட்டங்களில் வெளியேறினார். ஜகுருல் 53, தமிம் 70 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து சாகிப் 49, நசீர் 54 ஓடங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் 2 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் மகமதுல்லா எல்லை ஒன்றை அடித்து வெற்றியை வசப்படுத்தினார். வங்கதேசம் 49.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 293 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.


ஆசியக்கிண்ணப் போட்டித் தொடரில் இதுவரை 4 ஆட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் முதலாவது ஆட்டத்தில் பாக்கித்தான் அணி வங்காளதேசத்தை 21 ஓட்டங்களாலும், இரண்டாவதில் இந்தியா இலங்கையை 50 ஓட்டங்களாலும், மூன்றாவதில் பாக்கித்தான் இலங்கையை 6 இலக்குகளாலும், நான்காவதில் வங்காளதேசம் இந்தியாவை 5 இலக்குகளாலும் வென்றன.


மூலம்[தொகு]