நூற்றாண்டு பழமையான பராகுவே பழங்குடியினப் பெண்ணின் எச்சங்கள் மீள ஒப்படைக்கப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, மே 5, 2012

மானிடவியலாளர்களினால் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் அருங்காட்சியகம் ஒன்றுக்குக் கொண்டு செல்லப்பட்ட ஆச்சே என்ற பராகுவே நாட்டுப் பெண்ணின் தலையோடு ஆச்சே சமூகத்தினரிடம் திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளது.


தாமியானா கிரீகி என்ற பெண் 4 வயதாக இருக்கும் போது 1896 ஆம் ஆண்டில் வெள்ளையின குடியேற்றவாதிகளால் கடத்தப்பட்டார். இப்பெண்ணின் குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்டனர். இப்பெண் 11 ஆண்டுகளின் பின்னர் அர்ஜெண்டீனாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது இறந்துவிட்டார். இப்பெண்ணின் எச்சங்கள் மானிடவியலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, இறுதியில் செருமனியில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் பார்வைக்காகக் வைக்கப்பட்டிருந்தது.


பராகுவே பழங்குடியினரின் நீண்ட காலக்கோரிக்கையை அடுத்து இப்பெண்ணின் தலையோடு பராகுவே தலைநகரில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் வைத்து ஆச்சே பழங்குடியினரிடம் கையளிக்கப்பட்டது. இது அப்பெண் பிறந்த இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட விருக்கிறது.


"ஆச்சே மக்களிடம் எம்மை மன்னிக்கும் படி நாம் கேட்டுக் கொள்கிறோம்," எனப் பராகுவே பிரதி வெளியுறவுத்துறை அமைச்சர் வைபவத்தில் உரையாற்றும் போது கூறினார்.


ஆச்சே பிரதேசம் தற்போது தேசியப் பூங்காவாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்பிரதேசத்தைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு ஆச்சே இனத்தவர்கள் கோரி வருகின்றனர். "இது எமது வம்சாவழியினரின் நிலம், முன்னூறுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் இங்கிருந்து வெள்ளையினத்தவரால் எடுத்துச் செல்லப்பட்டனர். எமக்கு இழைக்கப்பட்ட துரோகத்திற்காக எமது பிரதேசத்தை எம்மிடம் ஒப்படைப்பதே சிறந்தது" என பழங்குடியினத் தலைவர்களில் ஒருவர் கூறினார்.


மூலம்[தொகு]