உள்ளடக்கத்துக்குச் செல்

சிரியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூலை 18, 2012

சிரியாவின் தலைநகர் டமாசுக்கசில் தேசியப் பாதுகாப்புப் பேரவைத் தலைமையகத்தில் இடம்பெற்றதாகக் கருதப்படும் ஒரு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் சிரியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் தாவூது இராஜிகா கொல்லப்பட்டார் என அந்நாட்டுத் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.


துணைப் பாதுகாப்பு அமைச்சர், அரசுத்தலைவர் அசாடின் மைத்துனர் ஆகியோர் உட்படப் பலர் கொல்லப்பட்டனர். மேலும் பல உயர் அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளனர். குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற வேளை இவர்கள் உயர் மட்டக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்தனர். 60 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


தலைமையகம் அமைந்துள்ள பகுதி சுற்றி வளைக்கப்பட்டு பாதுகாப்புக்காக மூடப்பட்டுள்ளது. தற்கொலைக் குண்டுதாரி அரசுத்தலைவர் பசார் அல்-அசாடின் அதிகாரிகளுக்கு மெய்க்காப்பாளராகப் பணியாற்றியவர் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.


தலைநகரில் கடந்த சில நாட்களாக வன்முறைகள் இடம்பெற்று வரும் நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜெனரல் இரஜீகா கடந்த ஓராண்டு காலமாக பாதுகாப்புத்துறை அமைச்சராகப் பதவியில் இருக்கிறார். இவர் அரசுக்கெதிரான மக்கள் ஆர்ப்பாட்டங்களை வன்முறைகள் மூலம் அடக்கியமைக்காக அமெரிக்க அரசின் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.


கொல்லப்பட்ட தாவூது இராஜிகா ஒரு பழமைவாதக் கிறித்தவராவார்.


இதற்கிடையில் சிரியப் பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் சிரியா தொடர்பான சிறப்புத் தூதர் கோபி அனான் உருசியத் தலைவர் விளாதிமிர் பூட்டினையும், ஐநா செயலர் பான் கி-மூன் சீனத் தலைவர் ஹு சிந்தாவுவையும் சந்தித்துப் பேசியுள்ளனர்.


மூலம்

[தொகு]