கொசோவோ விடுதலை சட்டபூர்வமானது என பன்னாட்டு நீதிமன்றம் தீர்ப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூலை 23, 2010

2008 ஆம் ஆண்டில் சேர்பியாவிலிருந்து பிரிந்து கொசோவோ மேற்கொண்ட விடுதலைப் பிரகடனம் சர்வதேசச் சட்டங்களுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஐநாவின் பன்னாட்டு நீதிமன்றம் வியாழனன்று தீர்ப்பு வழங்கியது.


நெதர்லாந்தில் உள்ள பன்னாட்டு நீதிமன்றம்

கொசோவோவின் விடுதலைப் பிரகடனத்தை 69 உலக நாடுகள் அங்கீகரித்துள்ள போதும் இவ் வழக்கில் அதனை நிராகரிக்குமாறு சேர்பியா கோரியிருந்தது. பன்னாட்டு நீதிமன்றத்தின் 14 நீதிபதிகளில் 10 பேர் கொசோவோ விடுதலையை சட்டபூர்வமானது என அறிவித்தார்கள்.


சர்வதேச நீதிமன்றம் இதனை ஏற்றுக் கொண்டாலும் தாம் கொசோவோவை எப்போதும் அங்கீகரிக்கப்போவதில்லை என சேர்பியா தெரிவித்துள்ளது.


கொசோவோ பிரிந்தபோது அதை பல நேட்டோ நாடுகள் ஆதரித்திருந்தன. அதன் பிரிவினையானது எதிர்காலத்தில் உலகின் மற்ற பகுதிகளுக்கான முன்னுதாரணமாக ஆகாது என்று அந்த நாடுகள் அப்போது கூறின. ஆனால் உருசியா இந்த நிலைப்பாட்டை ஏற்கவில்லை. 2008 ஆம் ஆண்டு உருசியப் படைகள் ஜோர்ஜியாவுக்குள் சென்றதன் விளைவாக, தெற்கு ஒசெத்தியா மற்றும் அப்காசியா ஆகிய இரண்டு குட்டி நாடுகள் உருவாக வழிபிறந்தது. ஆனால் இந்த இரு நாடுகளையும் இதுவரை வெகுசில நாடுகள் தான் அங்கீகரித்துள்ளன.


பன்னாட்டு நீதிமன்றத்தின் நேற்றைய தீர்ப்பை அடுத்து மேலும் பல நாடுகள் கொசோவோவை அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கலாம் என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


செர்பியப் படைகளுக்கும், அல்பேனிய இன பிரிவினைவாதிகளுக்கும் இடையிலான போரை அடுத்து 9 ஆண்டுகளின் பின்னர் கொசோவோவின் அல்பேனிய இன பெரும்பான்மையினர் 2008 இல் விடுதலைப் பிரகடனம் செய்தனர்.

தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]

Sources[தொகு]