உள்ளடக்கத்துக்குச் செல்

1999 கொசோவோ படுகொலைகளுக்காக ஒன்பது பேர் மீது குற்றச்சாட்டு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, செப்டம்பர் 12, 2010

மே 1999 இல் கொசோவோவில் குறைந்தது 43 அல்பேனியர்களைப் படுகொலை செய்தமைக்காக முன்னாள் சேர்பிய துணை இராணுவத்தினர் ஒன்பது பேர் மீது சேர்பிய வழக்குத் தொடுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


இவ்வாண்டு ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட இந்த ஒன்பது பேரின் மீதும் குஸ்க்கா என்ற கிராமத்தில் உள்ளூர் அல்பேனியப் பொதுமக்களைப் படுகொலை செய்த குற்றம் சுமத்தப்படவிருப்பதாக சேர்பிய போர்க்குற்ற நீதிமன்றம் நேற்று சனிக்கிழமை அறிவித்துள்ளது. இந்த ஒன்பது பேரும் துணை இராணுவக் குழுவான சக்காலி என்ற அமைப்பின் உறுப்பினர்கள் ஆவர்.


கொசோவோவில் இருந்து அல்பேனியர்களை வெளியேற்றும் பொருட்டு இவர்கள் அல்பேனியப் பொதுமக்களை மிகவும் கொடூரமான முறையில் சித்திரவதை, மற்றும் பாலியல் பலாத்காரம் போன்றவற்றை மேற்கொண்டு படுகொலை செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொசோவோ போரின் போது கிட்டத்தட்ட 13,000 பேர் கொல்லப்பட்டனர். இவரக்ளில் பெரும்பான்மையானோர் அல்பேனியர்கள் ஆவர்.


செர்பியப் படையினருக்கு எதிரான நேட்டோ படைகளின் 11 வார கால குண்டுத்தாக்குதல்களை அடுத்து கொசோவோ போர் முடிவுக்கு வந்தது. கொசோவோ 2008 ஆம் ஆண்டில் சேர்பியாவில் இருந்து பிரிந்து செல்வதாக அறிவித்தது. ஐக்கிய அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கொசோவோவை உடனடியாகவே அங்கீகரித்தன. ஆனால் சேர்பியா இதுவரையில் கொசோவோவை அங்கீகரிக்கவில்லை.

மூலம்

[தொகு]