உள்ளடக்கத்துக்குச் செல்

டைட்டானிக் கப்பல் மூழ்கியது எப்படி என உயிர் தப்பிய கப்பல் அதிகாரியின் பேத்தி விளக்கம்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, செப்டெம்பர் 24, 2010


கப்பல் எப்பக்கமாகத் திருப்பப்பட வேண்டும் என்ற குழப்பமே டைட்டானிக் கப்பல் மூழ்கியமைக்குக் காரணம் என மூழ்கிய கப்பலின் அதிகாரி ஒருவரின் உறவினர் தெரிவித்துள்ளார்.


டைட்டானிக் கப்பலின் இரண்டாம் நிலை அதிகாரி சார்ல்ஸ் லைட்டொலர்
டைட்டானிக் கப்பல் மூழ்கியது

டைட்டானிக்கின் இரண்டாம் நிலை அதிகாரியான சார்ல்ஸ் லைட்டொலர் என்பவரின் பேத்தி புதின எழுத்தாளர் லூயிஸ் பேட்டன் இது குறித்து தெரிவிக்கையில், ”டைட்டானிக் கப்பலுக்கு முன்னால் பனிக்கட்டி மிதப்பதைக் கண்டுபிடித்து, கப்பலை இடது பக்கமாக திருப்பச் சொன்னார்கள். ஆனால் அதைத் தவறுதலாகப் புரிந்து கொண்டு வலது பக்கமாக திருப்பி விட்டார்கள்,” என சார்ல்ஸ் லைட்டோலர் தன்னிடம் தெரிவித்ததாக அண்மையில் எழுதியுள்ள புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.


பெல்பாஸ்டில் தயாரிக்கப்பட்ட சொகுசுக் கப்பலான டைட்டானிக் 1912 ஆம் ஆண்டு ஏப்ரலில் அத்திலாந்திக் பெருங்கடலில் முழ்கியதில் 1,500 பேர் உயிரிழந்தனர்.


கடல் போக்குவரத்து பாய்மரக் கப்பல்களில் இருந்து நீராவிக் கப்பல்களுக்கு மாற்றம் பெற்ற காலகட்டத்திலேயே இந்த அனர்த்தம் விளைந்ததாக அவர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.


அக்காலகட்டத்தில் இரண்டு வெவ்வேறான ஒழுங்கமைப்புகள் நடைமுறையில் இருந்தன. ஒன்று நீராவிக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட ரடர் கட்டளை (Rudder Orders), மற்றையது பாய்மரக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட டில்லர் கட்டளை (Tiller Orders). இவையிரண்டும் ஒன்றுக்கொன்று முற்றிலும் எதிரெதிரானவை. ஒரு முறையில் வலது பக்கம் திருப்பு என்ற கட்டளை மற்றைய முறையில் இடது பக்கத்துக்காகும்.


சார்லஸ் லைட்டோலர் இதனை வெளியில் சொல்லாமல் இரகசியமாகவே வைத்திருந்ததாக லூயிஸ் பேட்டன் தனது குட் அச் கோல்ட் (Good As Gold) என்ற தனது கடைசிப் புதின நூல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.


உயிர் தப்பியவர்களில் லைட்டோலர் மட்டுமே இதனைத் தெரிந்து வைத்துள்ளார். டைட்டானிக் கப்பலின் உரிமையாளர் புரூஸ் இஸ்மே இவ்விரகசியத்தை வெளியிட வேண்டாமென்று அவரிடம் கேட்டுள்ளார். அதிகாரபூர்வ விசாரணைகளில் கூட லைட்டோலர் இதனைத் தெரிவிக்கவில்லை என லூயிஸ் பேட்டன் எழுதியுள்ளார். தான் பணியாற்றிய வைட் ஸ்டார் லைனர் கம்பனியைக் காட்டிக் கொடுக்க அவர் விரும்பாததே அதற்குக் காரணம் என பேட்டன் எழுதியுள்ளார்.

மூலம்